தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் சுமார் 2 மணி நேரம் ஸ்டாலின் எங்கே போனார் என்று திமுகவில் அவருக்கு நெருக்கமான சிலருக்கே தெரியாத அளவிற்கு ரகசியம் காக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதியுடன் கலைஞர் நினைவிடம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஊடகங்களின் ஒட்டு மொத்த பார்வையும் கலைஞர் நினைவிடம் நோக்கி திரும்பியது. அங்கு ஏற்கனவே அறிவித்ததது போல் குடும்பத்துடன் வந்த மு.க.ஸ்டாலின் கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அங்கிருந்து நேராக சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் சென்றார்.

அங்கு நீண்ட வரிசை இருந்த நிலையில் அந்த வரிசையில் ஸ்டாலினும் சென்று நின்று கொண்டார். வாக்காளர்கள் பலர் ஸ்டாலினுடன் பேச முயன்றும் அவர் யாருடனும் பேசாமல் அமைதி காத்தார். இதற்கு காரணம் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளராக இருக்கும் ஒருவர் வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் யாருடனும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது தான். இதனால் சுமார் 20 நிமிடங்கள் வரை அமைதியாக வரிசையில் நின்ற ஸ்டாலின் பிறகு தன்னுடைய நிலை வந்த பிறகு வாக்கு செலுத்தினார. பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் உற்சாகம் குறையாமல் பேசினார்.

எத்தனை இடங்களில் திமுக வெல்லும் என்கிற கேள்விக்கு இதுநாள் வரை 234 தொகுதிகளிலும் திமுக வெல்லும் என்று ஸ்டாலின் பதில் கூறி வந்தார். ஆனால வாக்குப் பதிவு நாளன்று அந்த கேள்விக்கு அது ஊடகவியலாளர்களுக்குத்தான் நன்றாகத் தெரியும் என்று கூறிவிட்டு புறப்பட்டார் ஸ்டாலின். இதன் பிறகு ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் செல்வார் என்று திமுக நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஏனென்றால் கலைஞர் வாக்களித்த பிறகுநேரடியாக அண்ணா அறவாலயம் சென்று அங்கிருந்து மாவட்டச் செயலாளர்களை அழைத்து வாக்குப்பதிவு நிலவரம் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்வார்.

மேலும் எதிர்தரப்பு செய்யும் தகிடுதத்தங்கள் குறித்த புகார்களை பெற்று உடனடியாக திமுக சட்டப்பிரவு மூலம் அதற்கு ஆவண செய்ய கலைஞர் உத்தரவிடுவார். இதே பாணியில மு.க.ஸ்டாலினும் சென்னை அண்ணா அறிவாலயம் வருவார் என்று எதிர்பார்த்து முக்கிய நிர்வாகிகள் பலரும் காத்திருந்தனர். ஆனால் ஸ்டாலின் வாகனம் திடீரென தனது வழக்கமான பாதையில் திருந்து திரும்பி வேறு பக்கம் சென்றது. கட்சிக்காரர்கள் யாருடைய வாகனமும் அந்தப்பக்கம் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அண்ணா அறிவாலயத்தில் காத்திருந்த திமுக நிர்வாகிகள் ஸ்டாலின் எங்கே என்று விசாரிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை ஸ்டாலின் எங்கு சென்றார் என்கிற தகவல் யாருக்கும் சொல்லப்படவில்லை. இதன் பிறகு தான் ஸ்டாலின் சென்னை வந்துள்ள பிரசாந்த் கிஷோருடன் அவரது தேனாம்பேட்டை அலுவலகத்தில் ரகசிய மீட்டிங்கில் இருந்தது தெரியவந்தது. தனது மருமகன் சபரீசனுடன் அங்கு சென்ற ஸ்டாலின், சில முக்கிய விஷயங்கள் குறித்து பிரசாந்த் கிஷோருடன் ஆலோசித்ததாக கூறுகிறார்கள். இதே போல் தமிழக தேர்தலை வைத்து டெல்லியில் நடைபெறும் காய் நகர்த்தல்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் ஸ்டாலின் தரப்பிடம் எடுத்துரைத்ததாக சொல்கிறார்கள்.

இந்த மீட்டிங்கிற்கு பிறகு ஸ்டாலின் நேராக தனது வீட்டிற்கே சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகும் அவர் திமு கநிர்வாகிகளுடன் பெரிய அளவில் பேசவில்லை என்கிறார்கள். சபரீசன் தான் தமிழகம் முழுவதும் இருந்து வரும் அதிமுக டோக்கன் விநியோகம் தொடர்பான தகவல்களை சேகரித்து ஊடகங்களிடம் அது குறித்து எடுத்துரைத்து விவகாரமாக்கிக் கொண்டிருந்ததாக சொல்கிறார்கள்.