சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை அடுத்த மாதம் தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில் அதே சமயத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கான எற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நாளை மறுநாள் முதல் கமல் பிரச்சாரத்தை துவங்க உள்ளதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. அதாவத 13ந் தேதி முதல் 16ந் தேதி வரை மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கமல் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 4 நாட்களில் தென்மாவட்டங்கள் அனைத்தையும் ஒரு ரவுண்ட் வந்துவிடுவது என்பது கமலின் இலக்கு. பெரும்பாலும் நகரப்பகுதிகளை குறி வைத்துகமல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நகரப்பகுதிகளில் அதிக வாக்குகளை கைப்பற்றியிருந்தது.

இதனை மனதில் கொண்டு கமல் இந்த முறை நகரப்பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி அதிக வாக்குகளை அறுவடை செய்ய வியூகம் வகுத்திருக்கிறார். மேலும் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் திமுகவின் உதயநிதிக்கு அடுத்து மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை மேற்கொள்ளும் தலைவராக கமல் தன்னை காட்டிக் கொள்ள இருக்கிறார். திமுகவின் உதயநிதி, கனிமொழி போன்றோர் பிரச்சாரங்கள் பெரிய அளவில் ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இதே போல் பொதுமக்களும் கூட திமுக பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் கமல் மேற்கொள்ள இருக்கும் பிரச்சாரம் கடந்த முறையை போல் கூட்டத்தை கூட்டும் வகையில் இருக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தாலும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி பிரச்சாரத்திற்கு மக்கள் வர வேண்டும் என்று கமல் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை 200 பேர் வரை மட்டுமே அதுவும் உள்ளரங்கிற்கும் மட்டுமே அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி உள்ளது. ஆனால் கமலோ, தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகிறார். உரிய முன் அனுமதி இல்லாமல் அரசியல் நிகழ்வுகளை எங்கும் நடத்த முடியாது.

எனவே தமிழக அரசிடம் கமல் இதற்கு அனுமதி பெற்றுள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் உதயநிதி, கனிமொழி பிரச்சாரத்தை சுட்டிக்காட்டும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தாங்களும் அது போல பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்றும், தங்கள் பிரச்சார யுக்தியை பொறுத்திருந்து பாருங்கள் என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதெல்லாம் கமல் வேட்பாளரை அறிவித்துவிட்டே மக்களை சந்தித்தார். ஆனால் சட்டப்பேரவை தேர்தலுக்காக சுமார் 5 மாதங்களுக்கு முன்னரே கமல் மக்களை சந்திக்க செல்வதன் பின்னணியில் ஒரு அரசியல் உள்ளதாக சொல்கிறார்கள்.

அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை அன்று பிரச்சசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அன்று முதல் தேர்தல் வரை மு.க.ஸ்டாலினுக்காக வரிசையாக பிரச்சார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்படி மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் இருக்கும் சமயத்தில் நாமும் பிரச்சாரத்தை தொடங்கினால் ஊடக வெளிச்சம் அதிகம் கிடைக்கும் என்று கமல் நம்புகிறார். மேலும் ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையிலும் பிரச்சார வியூகத்தை வகுக்க முடியும் என்று அவர் கருதுகிறார். அதோடு ஸ்டாலின் பிராச்சாரத்தை தொடங்கிய பிறகு தொடங்குவதை காட்டிலும் அவருக்கு முன்னதாகவே தொடங்குவது என்று கமல் தீர்மானித்திருக்கிறார்.

இதன் மூலம் ஒட்டு மொத்தமாக மு.க.ஸ்டாலின் மீது பாயும் ஊடக வெளிச்சத்தை தடுக்க முடியும் என்பது கமலின் திட்டம். மேலும் அதிமுக களம் இறங்காத நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு இணையாக பிரச்சாரம் மேற்கொண்டால் மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யத்தை அதிகம் கொண்டு சேர்க்க முடியும் என்றும் வியூகம் வகுத்துள்ளார். அதோடு மக்கள் அல்லாமல் பிரச்சாரத்தின் போது விவகாரமான கேள்விகளை எழுப்பி திமுக தரப்பிற்கு குடைச்சல் கொடுக்கலாம் என்றும் கமல் பிரச்சாரத்தை முதலிலேயே துவக்குகிறாராம்.