சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அண்மையில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு காடுவெட்டி குரு மகன் கனலரசனின் அரசியல் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

தனது தந்தை மறைவுக்கு பிறகு தனது குடும்பத்திற்கு பாமக தலைமையிடம் இருந்து அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக நம்புகிறார் கனலரசன். மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் 2முறை கனலரசனை அழைத்து பேசிய போதும் அவரை சமாதானம் செய்ய முடியவில்லை. இதற்கிடையே காடுவெட்டி குருவின் தாயாரும் கனலரசின் பாட்டியுமான கல்யாணி அம்மாள் ராமதாசுக்கு எதிராக எடுத்துள்ள நிலைப்பாட்டை யாராலும் சரி செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

தற்போதைய நிலையில் தனது பாட்டி கல்யாணி அம்மாள் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கனலரசன் செய்வதாக கூறுகிறார்கள். காடு வெட்டி குரு மீது அபிமானம் கொண்ட வன்னியர் சமுதாய இளைஞர்கள் பலரும் கனலரசன் பின்னால் அணிவகுக்க தயாராகி வருகிறார். கடந்த 2 வருடங்ளாகவே கனலரசன் வன்னியர் சமுதாயம் சார்ந்த இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க முயன்று வருகிறார். ஆனால் பாமக தரப்பில் இருந்து இதற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

காடுவெட்டியில் உள்ள தனது தந்தையின் நினைவிடத்தில் அவரது நினைவு தினத்தன்று பெரும் கூட்டத்தை கூட்ட முயன்ற கனலரசனுக்கு பாமக மாவட்டச் செயலாளர் மூலம் கொடுக்கப்பட்ட நெருக்கடியால் மோதல் மூண்டு அரிவாள் வெட்டு என்கிற நிலையில் முடிந்தது. இப்படி ஒரு பக்கம் பாமகவை எதிர்கொண்டிருந்தாலும் தனது தந்தையின் ஆதரவாளர்களை எப்படியாவது ஒருங்கிணைத்துவிட வேண்டும் என்பதில் கனலரசன் தீவிரம் காட்டி வருகிறார். இந்த சூழலில் தான் திடீரென உதயநிதி ஸ்டாலினை கனலரசன் சந்தித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கனலரசனை சந்திக்க மு.க.ஸ்டாலின் தரப்பு முயற்சி மேற்கொண்டது.

ஆனால் அப்போது ராமதாஸ் நேரடியாக தலையிட்டு கனலரசனை சமாதானம் செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் அதன் பிறகும் பாமக தலைமை கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத நிலையில் தான் தற்போது உதயநிதியை சந்தித்ததோடு இல்லாமல் திமுகவிற்கு ஆதரவாக வன்னியர் இளைஞர்களை திரட்டும் பணியில் கனலரசன் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதற்காக வட மாவட்டங்களில் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள் கனலரசனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

இதனால் பாமக நிர்வாகிகள் தொந்தரவு இல்லாமல் கனலரசன் தனது அரசியல் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக வட மாவட்டங்களில் தற்போது வன்னியர் சங்க இளைஞர்களை கனலரசனால் எவ்வித தொந்தரவும் இன்றி சந்திக்க முடிகிறது. மேலும் ஆலோசனை கூட்டங்கள் போன்ற சமாச்சாரங்களை திமுக மாவட்டச் செயலாளர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இதனால் கனலரசன் தனது பணிகளை வேகமாக்கியுள்ளதுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு புதிதாக இயக்கம் ஒன்றை தொடங்கவும் முடிவு செய்துள்ளதார்.

கனலரசன் இப்படி வன்னியர் சங்க இளைஞர்களை ஒன்று சேர்ப்பது பாமகவிற்கு பெரிய தலைவலியாகியுள்ளது. காடுவெட்டி குரு மகன் என்பதால் வன்னிய சங்க இளைஞர்களும் எவ்வித தயக்கமும் இன்றி அவர் கூறுவதை கேட்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் சட்டப்பேரவை தேர்தலில் ராமதாசுக்கு கனலரசன் மூலம் மிகப்பெரிய தலைவலி காத்திருப்பதாக கூறுகிறார்கள்.