தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்க வராததால் அக்கட்சி  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் ஒரு வாரம் பிரசாரம் செய்தார். அவர் வாகனத்தில் இருந்தபடி வாக்கு சேகரித்து விட்டு மட்டும் சென்றார். எதுவும் அவர் பேசவில்லை. 

இந்நிலையில், நேற்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளரும், விருத்தாசலம் தொகுதி வேட்பாளருமான  பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிகிராமம் காவேரி உயர் நிலைப்பள்ளியில் வாக்களித்தார். இதேபோல் விஜயகாந்த் மகன்கள் சண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோரும் வாக்களித்தனர். அப்போது, விஜயகாந்த் மாலையில் வந்து ஓட்டளிப்பார் என விஜயபிரபாகரன் கூறினார்.

இதனால், காலை முதல் இரவு வரை விஜயகாந்தின் வருகையை எதிர்பார்த்து தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் காத்திருந்தனர். கடைசி வரை விஜயகாந்த் வராததால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுதொடர்பாக விசாரித்த போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் வாக்களிக்க வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.