டெல்லியில் பிரதமர் மோடியை ராமதாஸ் சந்தித்தன் பின்னணியில் சட்டமன்ற தேர்தல் வியூகம் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக பாஜக தலைமையிலான கூட்டணியில் தான் இருந்தது. அப்போது தருமபுரியில் வென்ற மகன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவியை ராமதாஸ் எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை என்றதும் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தார். ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தார்.

இதற்கு காரணம் இந்த முறை மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதற்கு தான் என்று பேசப்பட்டது. தற்போது மாநிலங்களவை எம்பியாக உள்ள அன்புமணியை மத்திய அமைச்சராக்க நடைபெற்று வரும் முயற்சியின் அங்கமாகவே ராமதாஸ் நேரடியாக டெல்லி சென்று மோடியை சந்தித்ததாக கூறுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் ராமதாஸ் டெல்லி சென்று அரசியல் ரீதியிலான ஒரு சந்திப்பை நிகழ்த்தியிருப்பது தற்போது தான்.

அந்த அளவிற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மோடி சந்திப்பை ராமதாஸ் நினைத்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி குறித்து வாய்விட்டு ராமதாஸ் கேட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள். அப்போது சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு வந்த போது, நமது கூட்டணி தொடர மத்திய அமைச்சர் பதவி முக்கியம் என்று கொக்கி போட்டுள்ளதார் ராமதாஸ் என்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக – திமுக தவிர்த்து ஒரு கூட்டணியை அமைக்க பாஜக தயாராகி வருகிறது. ரஜினி தலைமையிலான அந்த கூட்டணியில் ராமதாஸின் பாமகவிற்கு முக்கிய இடம் கொடுக்கப்படும் என்று பேச்சு நிலவுகிறது. இந்த சமயத்தில் டெல்லி சென்று சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியை ராமதாஸ் உறுதிப்படுத்தியிருப்பதாக கூறப்படுவது தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தும்.