விழுப்புரம் மாவட்டத்தில் டி-ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்த இளைஞர்கள் நூற்றுக்கணக்கனோர் ஒரே இடத்தில் கூடி இருந்தால் அந்த இடத்தில் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் இருப்பார் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

அந்த அளவிற்கு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னேரே மாவட்ட முழுவதும் ரவுண்ட் கட்டி இளைஞர்கள் பட்டாளத்தை கவர்ந்து வருகின்றனர் CVs பிரதர்ஸ். எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், செஞ்சி, மயிலம், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் என ஆறு தொகுதிகள் இருக்கின்றன. 

இந்த 6 தொகுதிகளுக்கு ஒரே மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் இருந்து வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதாலும், அதிமுகவில் தான் அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்க சி.வி.சண்முகம் மற்றும் அவரது சகோதரர்களும் களத்தில் குதித்துவிட்டனர் என்று சொல்லுகின்றனர் விழுப்புரம் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.

விழுப்புரத்தை பொறுத்த வரையில் அதிமுக இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு,  மாவட்ட எம்.ஜி.ஆர்., மாவட்ட மாணவரணி செயலாளர், இளைஞரணி செயலாளர்களுடன் அடிக்கடி சி.வி.சண்முகமும், அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணனும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேபோல், 6 தொகுதியில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு கட்சிப் பதவிகளை கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி சட்டப்பேரவை தேர்தல் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் முதற்கட்டமாக சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் முதற்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார்.  அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜெ.யின் நிர்வாக இயக்குநரும்,  அமைச்சரின் அண்ணனுமான ராதாகிருஷ்ணனன். அமைச்சரின் அண்ணன் என்ற பந்தா இல்லாமல் டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் உடன் களத்தில் குதித்து இளைஞர்களுடன் மிங்கிளாக ஓட்டு வேட்டையாடுவது மிகப்பெரிய பலனை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர் அவருடன் இருப்பவர்கள்.  

அதிமுகவின் இந்த அதிரடி அதிவேக வேலைகளை பார்த்து திமுகவின் பொன்முடி மற்றும் முக்கிய தலைவர்கள் சற்று ஆடி தான் போயுள்ளனர்.  இந்த மாவட்டத்தில் மூன்று மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். செஞ்சி மஸ்தான், முன்னாள் அமைச்சர் ஆதரவாளரான புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ அங்கயற்கண்ணி என மூவர் இருந்தும் திமுக தரப்பில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். 

தற்போதைய நிலவரப்படி சி.வி.சண்முகம் குடும்பத்தினர் அதிரடியால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவினரின்  கையே ஓங்கியுள்ளதாம். இன்னும் வர இருக்கும் நாட்களில் அதிமுகவினர் அதிரடிகள் என்ன என்பதை அதிர்ச்சியுடன் கவனித்து வருகின்றனர் திமுகவினர். அதிரடி வேலைகளால் விழுப்புரம் மாவட்டத்தில் யாருடைய கை ஓங்குப்போகிறது என்பதை  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.