தெலுங்கானா சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திரசேகர ராவ் எதிர்கொண்டதன் பின்னணியில் இருப்பது பாஜகதான் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். தெலுங்கானா சட்டசபையின் ஆயுட் காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே நேற்று கலைக்கப்பட்டது. வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, சந்திரசேகர ராவின் முடிவுக்கு பின்னால் இருப்பது பாஜகதான் என்கின்றன விவரம் அறிந்த வட்டாரங்கள். மாநில கட்சிகளுடன் பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுகளை நடத்தி வருகிறது. இந்த கூட்டணி பேச்சுவார்த்தையானது லோக்சபா தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் என்கிற வகையில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக கூட லோக்சபா தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பாஜகவுடன் அணி சேரலாம் என்கிற பேச்சும் இருந்து வருகிறது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்பேச்சுவார்த்தையின் போது சந்திரசேகர ராவ், தெலுங்கானா சட்டசபைக்கான தேர்தல் என்பது அனேகமாக லோக்சபா தேர்தலுடன் நடைபெறக் கூடும். தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நிச்சயம் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் வாக்குகளை இழக்கும் நிலை உருவாகும். 

அதனால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்திவிடுகிறோம். தற்போதைய நிலையில் நாங்கள் தனித்தன்மையுடன் இருப்பதால் நிச்சயம் மீண்டும் வெல்வோம். அதேபோல் லோக்சபா தேர்தலிலும் கணிசமான இடங்களைப் பெறுவோம். லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதனை பாஜக மேலிடமும் ஆமோதித்திருக்கிறது. இதையடுத்து தெலுங்கானா சட்டசபையை கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாம். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கோமாளி என கடுமையாக விமர்சித்தார் சந்திரசேகர ராவ். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.