தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது.

 

இது குறித்து திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.,யுமான ஆர் எஸ். பாரதி கொடுத்துள்ள புகாரில், ‘’இதுகுறித்து தலைமை தேர்தல் முகவர் ஆவுடையப்பனிடம் நாங்குநேரி தொகுதி வேட்பாளர்மனோகரன் புகார் தெரிவித்து இருக்கிறார். திமுக - காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிடும் நாங்குநேரி தொகுதியில் பயன்படுத்த இருந்த வாக்கு இயந்திரங்கள் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.  அங்கிருந்து திடீரென எந்தக் காரணமும் இன்றி நேற்று முன் தினம் நள்ளிரவு டி.எண்.72 ஏ.இஸட் 7345  என்ற எண் கொண்ட வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இதுகுறித்து எந்த வித முன் அறிவிப்பும் கட்சியினருக்கும், வேட்பாளருக்கும் தெரியப்படுத்தவில்லை. இதுதேர்தல் விதிகளை மீறிய செயல். ஆகையால் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்து  இருந்த இடத்திற்கே மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.