Asianet News TamilAsianet News Tamil

இந்தமுறையில் முயற்சி செய்தால் கட்டாயம் நடக்கும்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கொடுத்த ஐடியா.

தமிழக அமைச்சரவை உடனடியாகக் கூடி 7 தமிழர்களை விடுதலை செய்யும்படி பரிந்துரை தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி, அழுத்தம் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Assemble the cabinet immediately .. Execute the resolution ..  Ramadas consultation for 7 tamils release
Author
Chennai, First Published Aug 6, 2021, 5:59 PM IST

உச்சநீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்படி 7 தமிழர் விடுதலைக்கு புதிய பரிந்துரையை ஆளுனருக்கு அரசு அனுப்ப வேண்டும் எனவும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:- வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், 14 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்யாவிட்டாலும், மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி அவர்களை விடுதலை செய்ய ஆளுனருக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள்  விடுதலை தொடர்பான சிக்கலில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்.

ஹரியானாவைச் சேர்ந்த வாழ்நாள் சிறைத் தண்டனை கைதி ஒருவரை, குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. வாழ்நாள் சிறைத்தண்டனை கைதிகளை  14 ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகள் சிறைவாசத்தை நிறைவு செய்த நிலையில் விடுதலை செய்த நிகழ்வுகள் தமிழகத்தில் பலமுறை நடந்துள்ளன. அதனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது புதிய விஷயமல்ல. ஆனால், இத்தீர்ப்பில் அரசியலமைப்புச் சட்டத்தின் 161& ஆவது பிரிவின்படி ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் அமைச்சரவை தீர்மானத்தின் உதவியுடன் அவர் என்னென்ன முடிவுகளை எடுக்கலாம் என்பது பற்றி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் தான் மிகவும் முக்கியமானவை.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்க வகை செய்கின்றன. அந்தப் பிரிவுகளின்படி செய்ய முடியாத தண்டனைக் குறைப்பைக் கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி, மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று செய்வதற்கு ஆளுனர்களுக்கு அதிகாரம்  உண்டு என்பது தான் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மையக்கரு ஆகும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்காக தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது முடிவெடுக்க முடியவில்லை என்று கூறி, அதை குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுனர் அனுப்பி வைத்து விட்ட நிலையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த புதிய வழிகாட்டுதல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி விடுதலை செய்ய மாநில ஆளுனருக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி  அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பின் இன்று வரை  1063 நாட்கள் ஆகியும் இந்த விஷயத்தில் ஆளுனர் எந்த முடிவும் எடுக்கவில்லை. மாறாக, இச்சிக்கலை  குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து விட்டு ஆளுனர் ஒதுங்கிக் கொண்டார். 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் இது தவறு என்பதைத் தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

தண்டிக்கப்பட்ட கைதிகளின் தண்டனைக் குறைப்பு தொடர்பாக மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி எத்தகைய முடிவை எடுக்கவும் 161-ஆவது பிரிவின்படி ஆளுனருக்கு எல்லையில்லா அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையும் 161-ஆவது பிரிவின்படி தான் ஆளுனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 161-ஆவது பிரிவு என்பது முழுக்க முழுக்க ஆளுனரின் அதிகாரம் சம்பந்தப்பட்டது. அவ்வாறு இருக்கும் போது 7 தமிழர் விடுதலை குறித்து ஆளுனர் தான் முடிவெடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து குடியரசுத் தலைவர் முடிவுக்கு அனுப்பிவைத்தது சரியல்ல.

7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மீது ஆளுனர் எப்போது முடிவெடுப்பார்? என்பது எவருக்குமே விடை தெரியாத வினா ஆகும். அதனால் 7 தமிழர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் கொடுப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. அது 7 தமிழர் விடுதலையை தாமதப்படுத்தும். கைதிகளின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்ய ஆளுனருக்கு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ள நிலையில், 7 தமிழர் விடுதலைக்காக ஆளுனரை மீண்டும் வலியுறுத்துவதே சாதகமான தீர்வாகும். எனவே,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை உடனடியாகக் கூடி 7 தமிழர்களை விடுதலை செய்யும்படி பரிந்துரை தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி, அழுத்தம் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios