“ஸ்டாலின் குறித்து அவர் மீது போட்ட கணக்கையெல்லாம் தப்பு என நிரூபித்து கடுமையாக உழைத்து வருகிறார். ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் சுபிட்சமாக இருக்கப்போகிறது”.
நான் இருக்கும் வரை காட்பாடி தொகுதியில் நான்தான் நிற்பேன், நான்தான் ஜெயிப்பேன் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காட்பாடியில் திட்டங்கள்
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக நீர்வழித் துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். “நான் இருக்கும் வரை இந்த காட்பாடி தொகுதிக்கு ஏதாவது செய்துகொண்டேதான் இருப்பேன். கிராமப்புறங்களில் இருந்து மாணவர்கள் வேலூரில் உள்ள கல்லூரிகளுக்கு செல்ல சிரமப்படுவதால், வள்ளிமலையில் விரைவில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும். பொன்னையில் விரைவில் அரசு மருத்துவமனையும் விளையாட்டு மைதானமும் கொண்டு வரப்படும். வேலை கிடைப்பதற்காக காட்பாடி தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.

பவர்ஃபுல் அமைச்சர்
காட்பாடி தொகுதியின் கடைகோடி வரை காவிரி தண்ணீர் கொண்டு செல்லப்படும். காட்பாடி டெல் தொழிற்சாலையை மூடினார்கள். அதை விற்கக்கூடப் பார்த்தார்கள். அங்கு புதிய தொழிற்சாலை இந்தாண்டு தொடங்கப்படும். பொன்னையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, அங்கிருந்து தண்ணீரை எடுத்து மக்களுக்கு விநியோகிக்க ரூ. 18 கோடி டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த காட்பாடி தொகுதியில் எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன். பவர்ஃபுல் அமைச்சராக இருந்துகொண்டு எதையும் செய்யாவிட்டால் காட்பாடி பின்நோக்கி சென்று விடும். இவ்வளவு செய்துவிட்டு நான் போய்விடுவேன் என நினைக்க வேண்டாம். நான் இருக்கும்வரை காட்பாடி என்னுடைய தொகுதிதான்.
காட்பாடி எனக்குத்தான்

என்னை53 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் என்னை உட்கார வைத்திருக்கிறீர்கள். அதற்கெல்லாம் இந்தத் தொகுதி மக்கள்தான் காரணம். அதனால், காட்பாடியில் நான்தான் நிற்பேன், நான்தான் ஜெயிப்பேன். 1960-61-ஆம் ஆண்டுவாக்கில் நான் கோபாலபுரம் வீட்டுக்கு போனபோது டவுசர் அணிந்து சுற்றிக்கொண்டிருந்த குழந்தைதான் ஸ்டாலின். ஆனால், இன்று என் தோளுக்கு மேல் வளர்ந்து என் தலைக்கு மேல் உயர்ந்து தலைவராக வளர்ந்து நிற்கிறார். நான் அவர் மீது போட்ட கணக்கையெல்லாம் தப்பு என நிரூபித்து கடுமையாக உழைத்து வருகிறார். ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் சுபிட்சமாக இருக்கப்போகிறது” என்று துரைமுருகன் தெரிவித்தார்.
