நான் ஆராய்ச்சி செய்து தெரிந்துகொண்ட வகையில் மனுஸ்மிருதியில் பெண்களை இழிவுப்படுத்தும் கருத்து இல்லை என கெளதமி தெரிவித்தார். 

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை கண்டித்து பாஜக மகளரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ் தலைமையில்  நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் நடிகை கெளதமி மற்றும் காயத்ரி ரகுராம் உள்ளிட்ட சுமார் 200ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டகாரர்கள் திருமாவளவனின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் பேசிய கௌதமி, அரசியல் கூட்டமாக இருந்தாலும் ஒரு வலியோடு வேதனையோடு தாயாகவும் சகோதரியாகவும் பேச வந்துள்ளேன். அரசியலில் எல்லாம் சகஜம் என்பதற்கு முற்று புள்ளி வைக்கும் இடமாக இந்த இடம் உள்ளது. அரசியலில் எல்லை மீறி பேசுகின்றனர்.பெண்ணை கொச்சை படுத்தி பேசும்போது இதை கண்டிக்க வார்த்தைகளே போதாது. ஒருவரின் அரசியல் சுயலாபத்துக்காக நாம் நம் உரிமையை விட்டு கொடுத்துவிட கூடாது.திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக போராடிவரும் இந்த காலத்தில் அரசியல் லாபத்துக்காக பெண்ணை தாழ்த்தி கொச்சை படுத்தி பேசுவது குற்றம். இதற்காக திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் ஆராய்ச்சி செய்து தெரிந்துகொண்ட வகையில் மனுஸ்மிருதியில் பெண்களை இழிவுப்படுத்தும் கருத்து இல்லை. 

பெண்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளாத வீடோ, தேசமோ அழிந்துவிடும் என மதுதர்மம் கூறுகிறது. பெண்களுக்கு முக்கியத்துவமும் தெய்வீகமான இடமும் கொடுத்த மனுஸ்மிருதியில் இல்லாததை சொல்லி அரசியல் லாபத்திற்காக பெண்களை தாக்கும் பொய்யான விஷயமாக உள்ளது. கந்தசஷ்டி கவசத்தை போல் மனுஸ்மிருதியில் உள்ள ஸ்லோகங்களையும் மக்களிடம் சென்று போட சொல்லி போராட்டம் நடத்துவீர்களா? என்ற கேள்விக்கு அந்த வலி வேறு இந்த வலி வேறு என பதில் அளித்தார்.