பீகார் சட்டமன்ற தேர்தலில் நண்பர் தேஜஸ்வி வெற்றி பெறுவார் என எதிர்பார்த்ததாகவும், இருப்பினும் மக்களின் முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகே திமுக சேப்பாக்கம் பகுதி கழகத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டாசு மற்றும் இனிப்பு வகைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், பீகார் தேர்தலில் நண்பர் தேஜஸ்வி வெற்றிபெறுவார் என எதிர்பார்த்தோம்.பீகார் தேர்தல் முடிவு ஏமாற்றத்தை தருகிறது. நிதிஷ்குமார் முதல்வராக வருகிறாரா என பார்க்கலாம்.இருந்தாலும் மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். 

தேர்தலைப் பொருத்தவரை மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும், தமிழகத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி நன்றாகத்தான் இருக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து சரியான முடிவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுப்பார் என்றார்.