நாங்கள் திராவிடத்தை ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் ஏன் எங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். பிராமணர்கள் தங்களை திராவிடர் என்றால் அதையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?

ஆரியம் திராவிடம் என்பது சுத்த ஏமாற்று வேலை என தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் கூறியுள்ளார். மொழி அடிப்படையில் பார்த்தாலும் சரி, பூகோள அடிப்படையில் பார்த்தாலும் சரி, பிராமணர்களும் திராவிடர்கள்தான் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 150 ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது என்றால் அது ஆரியம் அல்லது திராவிடம் என்பதாகத்தான் இருக்கும். திராவிடம் என்பது இந்த மண்ணில் இனம் என்றும், ஆரியம் என்பது கைபர் போலன் கணவாய் வழியாக வந்த இனம் என்பதும் திராவிட இயக்கத்தினரால் சொல்லப்பட்டு வருகிறது. இது குறித்த பல ஆய்வுகளும் இவ்வாறே கூறுகின்றன. வரலாற்றில் தொன்மையானதாக கருதப்படும் வேதத்தில் ஆரிய இனத்திற்கும் மற்றொரு இனத்தவருக்கும் இடையே போர் நடந்தது என திராவிட இயக்கத்தவர்களால் தொடர்ந்து சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் இரண்டு இனங்களுக்கு இடையே நடந்தவை அல்ல அவை சமூகத்திற்கு உள்ளேயே நடந்த மோதல் என்றும் கூறப்படுகிறது.

ஆரியர்கள் சிவப்பு நிறத்தவர்கள் என்றும் திராவிடர்கள் கருப்பு நிறத்தவர்கள் என்றும் பல கற்பிதங்கள் உள்ளது. ஆனால் ஆரியர்களாக குறிப்பிடப்படும் முனிவர்கள், மற்றும் கடவுகள் கருப்பு நிறத்தில் இருப்பதையும் காண முடிகிறது. இப்படி மாறி மாறி ஆரியம் திராவிடம் என்ற சொல் நேர் எதிர் சொல்லாகவே நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது வெறும் சொல் மட்டுமல்ல இரு நேரெதிர் துருவங்களாக நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனம். இதேபோல் ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் மரபணு துறை பேராசிரியர் டேவிட் ரெய்க்கியின் தலைமையில் ஒரு குழு இந்திய மக்கள் தொகை வரலாற்றின் மறு கட்டுமானம் என்ற தலைப்பில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளன. அதில் இந்திய மக்கள் தொகையில் மரபணு கட்டுமானத்தை ஆய்வு செய்த கட்டுரையில், வட இந்திய மூதாதையர் தென்னிந்திய மூதாதையர் என ரத்தக் கூறு பயன்படுத்துகின்றனர்.

வட இந்திய மூதாதையர் மரபு ரீதியாக மத்திய கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ஐரோப்பியர்களுக்கு நெருக்கமானவர்கள் என்றும், தென்னிந்திய மூதாதையர் பிரத்தியேகமான இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறது. மொத்தத்தில் இப்படி திராவிட- ஆரிய எதிர்ப்பு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், தமிழ் நாட்டில் எது நடந்தாலும் அதற்கு பிராமணர்கள் தான் காரணம் என்று பிரச்சாரம் அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. அதைதான் நாங்கள் வெறுக்கிறோம். ஆனால் நாளடைவில் பிராமண எதிர்ப்பும் நீர்த்துப் போய்விட்டது. திராவிடம்- ஆரியம் என்பது ஒரு ஏமாற்றுவேலை. கேரளாவின் திராவிடம் இருக்கிறதா? கர்நாடகத்தில் திராவிடம் இருக்கிறதா? ஆந்திராவின் திராவிடம் இருக்கிறதா?

அப்படியெனில் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி திராவிடம் இருக்கும். திராவிடம் என்பதே ஒரு சமஸ்கிருத வார்த்தைதான், இவை ஒரு பூகோள ரீதியாக வந்த பெயர், மணி திராவிட், ராகுல் திராவிட் என்றெல்லாம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் திராவிடம் என்பது அரசியல் அதிகாரம், ஆட்சி அதிகாரத்திற்காக பயன்படுத்துகிற ஒரு வார்த்தையாக இருக்கிறது, திராவிடம் என்ற தத்துவத்தை கூறி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் அது தொட்கிறது. ஆனால் இந்த சொல் தமிழ்நாட்டுக்கு பொருத்தமில்லாத ஒரு சொல், திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தையே, அப்படி வைத்துப் பார்க்கும்போதும் பிராமணர்கள் திராவிடர்கள்தான். புளோக ரீதியில் பார்த்தாலும் நாங்கள் பிராமணர்கள் இங்குதான் இருக்கிறோம், அதனால் நாங்கள் திராவிடர்கள். தமிழர்கள் தான் திராவிடர்கள் என்றால் நாங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோம் நாங்கள் திராவிடர்கள்தான்.

நாங்கள் திராவிடத்தை ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் ஏன் எங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். பிராமணர்கள் தங்களை திராவிடர் என்றால் அதையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? தமிழர்கள் என்றாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம், திராவிடர்கள் என்றாலும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களால், ஆனால் ஒரு கன்னடர், தெலுங்கர்கள் வந்து இவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சொன்னால் அதை அப்படியே கேட்பீர்களா.? இது என்ன கொடுமை என அவர் கூறியுள்ளார்.