‘உங்கள் மகளைக் கடத்தப்போகிறோம். அவரைக் காப்பாற்றுவதற்கு கைவசம் என்ன நடவடிக்கை வைத்திருக்கிறீர்கள்’ என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஈ மெயில் மூலம் மிரட்டல் செய்தி வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்தியாவின் மிக எளிமையான முதல்வர் என்று பெயரெடுத்த அர்விந்த் கேஜ்ரிவார் தகுந்த பாதுகாப்பு எதுவுமின்றி பொதுமக்களோடு வாக்கிங் செல்லும் இயல்பு கொண்டவர். சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலத்தில் வைத்தே ஒரு நபர் இவர் மீது மிளகாய்ப்பொடியைத் தூவினார்.

இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அலுவலகத்துக்கு கடந்த 9ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கடத்தப்பட உள்ளதாக இமெயில் மிரட்டல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி முதல் மந்திரி மகள் ஹர்ஷிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

முதல் மந்திரி அலுவலகத்துக்கு வந்த இமெயில் மிரட்டலை அனுப்பியது யார் என்பது குறித்து டெல்லி சைபர் க்ரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு மகன், ஒரு மகள் என்று இரண்டு பிள்ளைகள். தற்போது கடத்தல் மிரட்டலைச் சந்தித்திருக்கும் ஹர்ஷிதா டெல்லி ஐ.ஐ.டி.யில் படித்துவருகிறார்.