arumugasamy inquiry commission inquired rama mohana rao
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது காவிரி விவகாரம் குறித்து ஜெயலலிதா ஆலோசித்தார் என்று முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தவர்களிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் கடந்த 3 நாட்களாக குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், முன்னாள் தலைமை செயலர் ராம மோகன ராவிடம் இன்று சசிகலாவின் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
விசாரணைக்கு பின்னர் அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமமோகன ராவ், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, 2016 செப்டம்பர் 27ம் தேதி அன்றைய முதல்வர் ஜெயலலிதா படுக்கையில் இருந்தபடியே காவிரி விவகாரம் குறித்து 2 மணி நேரம் எங்களுடன் ஆலோசனை நடத்தினார் என்றார்.
மேலும், 2016ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெளிநாடு கூட்டிச் செல்வது குறித்து ஆலோசித்தாலும் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது என்றும் அவர் கூறியுள்ளார்.
