Asianet News Tamil

கையில் அதிகாரம் இருப்பதால் திமுகவினரை கைது செய்வீர்களா..? அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் பகிரங்க எச்சரிக்கை..!

தன்னை அரசியல்ரீதியாக விமர்சிப்பவர்களைப் பழிவாங்குவதிலும் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல்கள் செய்வதிலும் கைதேர்ந்தவராக அமைச்சர் வேலுமணி இருக்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
 

arrested dmk members issue...mk stalin warning minister sp velumani
Author
Tamil Nadu, First Published Jun 5, 2020, 6:51 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தன்னை அரசியல்ரீதியாக விமர்சிப்பவர்களைப் பழிவாங்குவதிலும் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல்கள் செய்வதிலும் கைதேர்ந்தவராக அமைச்சர் வேலுமணி இருக்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- உள்ளாட்சித் துறை அமைச்சராக மட்டுமல்லாமல் தன்னை 'சூப்பர் முதல்வரைப்' போல நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருபவர் அமைச்சர் வேலுமணி. தன்னை அரசியல்ரீதியாக விமர்சிப்பவர்களைப் பழிவாங்குவதிலும் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல்கள் செய்வதிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார்.

தன்னை எதிர்த்து எழுதிய காரணத்தால் பத்திரிகையாளர்களைக் கைது செய்து கோவையில் சிறையில் அடைத்தார் அமைச்சர் வேலுமணி. கொரோனா காலத்திலும் தனது கொள்ளைகளை நிறுத்தாமல் தொடரும் வேலுமணியின் வேலைகளைத் திமுகவின் கோவை மாவட்டச் செயல்வீரர்கள் தொடர்ந்து மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்கள். இதற்கு முறையாகப் பதில் சொல்ல முடியாத வேலுமணி, தனது கையில் அதிகாரம் இருப்பதால் திமுகவினரைக் கைது செய்து சிறைச்சாலைகளைத் தனது சதிவலைக்குப் பயன்படுத்தி வருகிறார்.

கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், விவசாய அணி அமைப்பாளர் எம்.எஸ்.ராமமூர்த்தி, கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆ.துரை, கீர்த்தி ஆனந்த், 84-வது வட்டச் செயலாளர் என்.ஜி.முருகேசன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சாரமேடு இஸ்மாயில், பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் ஆகியோர் வேலுமணியின் அராஜகங்களை அம்பலப்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டும், விடுவிக்கப்பட்டும், மீண்டும் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்கள்.

மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலுமணி அடையாளம் காட்டுபவர்களை எல்லாம் கைது செய்வதும், வழக்குப்பதிவு செய்வதும் கோவை மாநகரக் காவல்துறையின் ஒரே வேலையாக மாறிவிட்டது.

"உள்ளாட்சித் துறை அமைச்சரை எதிர்த்து விமர்சிப்பதற்காக, போராடுவதற்காக இனிமேலும் திமுகவினர் கைது செய்யப்பட்டால் நானே கோவைக்கு வந்து மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன்" என்று ஏற்கெனவே எச்சரித்துள்ளேன். கரோனா காலத்தில் போராட்டங்கள் வேண்டாம் என்றால், கோவையில் நடைபெறும் நடவடிக்கைகள் பொறுமையைச் சோதிப்பதாக அமைந்துள்ளன.

தன்னைக் கேட்பதற்கு யாருமில்லை என்ற தைரியத்தில் நடமாடி வருகிறார் அமைச்சர் வேலுமணி. முதல்வருக்கு வேண்டிய கப்பத்தை அவர் எதிர்பார்ப்பை விட அதிகமாகக் கட்டிவிடுகிறோம் என்று ஆட்டம் போடுகிறார் அமைச்சர் வேலுமணி. உள்ளாட்சித் துறை மூலமாக அடித்துக் குவித்த 'கரன்சி மலைகளை' மக்கள் அறியமாட்டார்கள் என்று இருக்கிறார் அமைச்சர் வேலுமணி. இந்தக் கொரோனா காலத்திலும் தனது கொள்ளைகளை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார் அமைச்சர் வேலுமணி. ஆனால் இவை மக்கள் அறியாதது அல்ல!

கொரோனா தொற்றால் தலைநகர் சென்னையே பீடிக்கப்பட மிக முக்கியமான காரணம் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் செயலற்ற தன்மை. வேலுமணியின் மிக மோசமான நிர்வாகத்தின் அடையாளம்தான் சுமார் 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதும், தினமும் ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதும், 150 உயிர்கள் இறந்ததும். இதைப் பற்றிய வெட்கமோ, கூச்ச உணர்வோ இல்லாமல் கொள்ளையடிப்பதிலும் அதனை அம்பலப்படுத்துபவர்களைக் கைது செய்வதிலும், இந்தச் செய்திகளை வரவிடாமல் தடுப்பதிலும், மீறிச் செய்தி வெளியிடுபவர்களை மிரட்டுவதிலும் வேலுமணியின் மொத்த நேரமும் போய்க்கொண்டு இருக்கிறது.

மக்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் பிளீச்சிங் பவுடர் வாங்குவதில் ஊழல், வேப்பெண்ணெய் வாங்குவதிலும் ஊழல் என்று ஊழலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இருக்கிறார். கொரோனா தொடர்ந்தால்தான் இவரது ஊழலும் தொடர முடியும். இத்தகைய மிக மோசமான அமைச்சரைத் தட்டிக் கேட்கும் நிலைமையில் தமிழக முதல்வரும் இல்லை. எனவேதான் மக்கள் மன்றத்தில் இதனைக் கண்டிக்க திமுக முடிவெடுத்தது. ஜூன் 5-ம் தேதி கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டோம்.

கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி ஆகிய மூவரது ஏற்பாட்டில் மிக எழுச்சியுடன் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்துள்ளது. கரோனா காலம் என்பதால் தனிமனித இடைவெளிவிட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. ஆனாலும் வேலுமணியின் போலீஸார், ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களைக் கைது செய்துள்ளார்கள். கோவை மாவட்டம் முழுவதும், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலகங்கள் முன்பு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பொய் வழக்குப் போட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதோடு, அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இதே போக்கு தொடருமானால், வேலுமணியின் 3 ஆயிரம் கோடி ஊழலைப் பட்டியலிட்டு மாபெரும் போராட்டத்தைக் கோவையில் நடத்துவோம் என எச்சரிக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios