Asianet News Tamil

சாதிவெறி கும்பலை கைது செய்.. தலித் இளைஞர்கள் படுகொலையில் எரிமழையாய் வெடிக்கும் சீமான்..

இளைஞர்களான அர்ஜூனன், சூர்யா ஆகிய இருவரையும் இழந்து ஆற்ற முடியாப் பெருஞ்சோகத்தில் மூழ்கித் திளைக்கும் அவரது குடும்பத்தினரை எதனைச் சொல்லித் தேற்றுவது எனத் தெரியாது கலங்கித் தவிக்கிறேன். 

Arrest the casteist gang .. Seeman who erupts like a volcano in the murder of Dalit youth ..
Author
Chennai, First Published Apr 9, 2021, 1:07 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

அரக்கோணத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இருவரைப் பச்சைப்படுகொலை செய்திட்ட சாதிவெறிக்கும்பலை உடனடியாகக் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: அரக்கோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுனன், சூர்யா ஆகிய இருவரும் சாதிவெறிக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமடைந்தேன். இத்தோடு, மூவர் தாக்குதலுக்கு ஆட்படுத்தப்பட்டு பெருத்த காயங்களோடு சிகிச்சைப் பெற்று வரும் செய்தியும் தாங்கொணாத் துயரைத் தருகின்றது. இளைஞர்களான அர்ஜூனன், சூர்யா ஆகிய இருவரையும் இழந்து ஆற்ற முடியாப் பெருஞ்சோகத்தில் மூழ்கித் திளைக்கும் அவரது குடும்பத்தினரை எதனைச் சொல்லித் தேற்றுவது எனத் தெரியாது கலங்கித் தவிக்கிறேன். 

 

தமிழ்ச்சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதி என்கிற கொடிய நோயை அறவே ஒழித்தால்தான் இதுபோன்ற மனித இனத்திற்கு அப்பாற்பட்டக் கொடூரங்கள் நிகழாமல் இருக்கும். சாதிய வன்மத்தோடும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு மனித உயிர்களை பறிக்கின்ற இதுபோன்ற கோரச்சம்பவங்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதுபோன்ற கொடுஞ்செயல்களை எதன்பொருட்டும் சகித்துக்கொள்ள முடியாது. எதற்கும் வன்முறை ஒரு தீர்வாகாது எனும்போது அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் காரணமாக வைத்து ஒரு கும்பலே கூடி சாதிய வன்மத்தோடு கொலைசெய்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

மொழியைச் சிதையக் கொடுத்து, இன அழிவைக் கண்முன்னே கண்டு, உரிமைகளைப் பறிகொடுத்து, உடைமைகளை இழந்துவிட்டு நிற்கையில், தமிழர் ஓர்மையை நிலைநிறுத்தி, தமிழர்களுக்கான அரசியலையும், அரசையும் கட்டியெழுப்ப நாம் தமிழர் என நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்ற சமகாலத்தில் தமிழினத்திற்குள் நடைபெறும் இதுபோன்ற சாதிய‌மோதல்களும், கொலைவெறித் தாக்குதல்களும், உயிரையே அற்ப நோக்கங்களுக்காகக் குடிக்கும் கொடுஞ்செயல்களும் ஒட்டுமொத்த தமிழ்ச்‌சமூகத்தையே வெட்கித்தலைகுனியச் செய்கின்றன. 

ஆகவே, இருவரைப் பச்சைப்படுகொலை செய்து, மூவரைத் தாக்கிய அந்த கொலைவெறிக் கும்பலை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். அவர்களுக்கு எவ்விதச் சலுகையோ, பரிவோ காட்டப்படாது, எவ்வித விதிவிலக்கும் அளிக்கப்படாது, அவர்கள் எந்த அரசியல் பின்புலத்தைக் கொண்டவர்களாக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து கைதுசெய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என‌வும், இதன்மூலம் தமிழகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் தேவையற்றப் பதற்றநிலையைத் தணிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios