’ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்யும்வரை மக்களை சந்தித்து நீதி கேட்கும் எனது போராட்டம் ஓயவே ஓயாது’ என்று அற்வித்திருக்கிறார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.

மக்களிடம் நீதிகேட்கு தனது பயணத்தின் தொடர்ச்சியாக,  கரூர் ஜவகர்பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அற்புதம்மாள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

’குற்றவாளிகள் தங்களது தண்டனை காலத்தில் குற்றத்தின் தன்மை அறிந்து மனம் திருந்த அமைக்கப்பட்டது தான் சிறைச்சாலை. மாறாக அவர்களை சித்ரவதை செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டது அல்ல. சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 28 ஆண்டுகளாக அந்த 7 பேர் சிறையில் இருக்கிறார்கள். இனியும் அவர்களை சிறைக்குள் அடைத்து சித்திரவதை செய்வது என்பது தர்மமாகாது.

அதே சட்டத்தின் பால் பணியாற்றும் தமிழக கவர்னர், கொலை குற்றவாளிகள் என கருதப்படும் அந்த 7 பேரையும் உடனே விடுதலை செய்ய கையெழுத்திட வேண்டும். கவர்னர் கையெழுத்திடும் வரை எனது மக்கள் சந்திப்பு பயணம் தொடரும். அந்த 7 பேரும் விடுவிக்கப்பட்டு அறிவிப்பு வெளியான பிறகுதான் எனது இந்த மக்களிடம் நீதிகேட்கும் பயணத்தை நிறுத்துவேன்’ என்கிறார் அற்புதம்மாள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள் ள பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அதனை பயன்படுத்தி அவர்களை விடுவிக்கலாம் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது. அந்தப் பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.