நீங்கள் மட்டும் உதவி செய்யாமல் இருந்திருந்தால் அது ஹெலிகாப்டரில் இருந்து ராணுவ வீரர்களின் உடல்களை மீட்க முடிந்திருக்காது. ஒரு விபத்து நடக்கும்போது அங்கு சென்று உதவி செய்பவர்கள்  கடவுளுக்கு சமமானவர்கள். 

ஹெலிகாப்டர் விபத்தின்போது தாங்களாக முன்வந்து மீன்பு பணியில் ஈடுபட்டு உதவிய கிராம மக்களுக்கு ராணுவ வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். "நீங்கள் தான் எங்களின் கடவுள்" நீங்கள் இல்லை என்றால் அத்தனை உடல்களையும் மீட்டு விற்க முடியாது" என்றும் கிராம மக்களுக்கு என்றும் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என அவர்கள் கூறியுள்ளனர். கடந்த 8ஆம் தேதி இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது துணைவியாருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்தபோது, அவர் வந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே உள்ள காட்டேரி என்ற வனப் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அவருடன் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ராணுவ தளபதி ராவத்தின் மனைவியும் அடக்கம். இந்த கோர விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில் பிபின் ராவத்தின் உடல் மற்றும் அவரது மனைவியின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக முப்படை தளபதியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல் விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கிருந்த கருப்பு பெட்டியை கைப்பற்றி அதை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வு முடிவுகள் வெளியே வந்த பிறகே விபத்துக்கான உண்மை காரணம் தெரியவரும்.

இந்நிலையில் இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ஹலிகாப்டர் விபத்து தொடர்பாக கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்ற பின்னரே விபத்திற்கான காரணங்கள் தெரியவரும், எனவே ஹெலிகாப்டர் உயிரிழந்த வீரர்களின் மரியாதை கருதி தேவையற்ற வதந்திகள் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து நடந்தை கேள்விப்பட்ட உடன் அதற்கான அனைத்து மீட்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகளையும் செய்ய உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கே சென்று இங்கு வெலிங்டன் கல்லூரியில் தங்கியிருந்து ராணுவ வீர ர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அனைத்து உதவிகளையும் முன்நின்று செய்து கொடுத்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து 

சென்னை, தக்ஷின் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டிணட் ஜெனரல் திரு. அ. அருண் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், நீலகிரி மாவட்டத்தில் 8.12.2021 அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தினர் 13 பேர் உயிரிழந்த துயரமான நேரத்தில், அவர்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் அருகில் இருந்து ஆறுதல் அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும், இதயபூர்வமான பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தகவல் அறிந்த உடனே- நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் தாங்கள் விரைந்து வந்து, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவ உயர் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்து விட்டீர்கள். அந்த தருணத்தில் எந்த எந்த உதவி முடியுமோ அந்த உதவிகளை எல்லாம் தங்களின் தலைமையின் கீழ் உள்ள தமிழ்நாடு அரசின் மொத்த நிர்வாகமும் செய்து தந்தது. 

இதுபோன்ற ஆதரவுகள்தான் எதிர்காலத்தில் நம் இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேருவதற்கும், ராணுவ உடை அணிவதற்கும், உற்சாகமூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமையும். தக்ஷின் பாரத் பகுதியின் தலைமை அலுவலர் என்ற வகையில் தங்களுடைய முன்மாதிரியான ஆதரவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். உங்களுடைய இந்த செயல், பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கும், மூத்த ராணுவ வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு நமக்கு ஆதரவாக இருக்கின்றது என்ற உணர்வை ஏற்படுத்தி, ஊக்கத்தை அளிப்பதோடு தேவைப்படும் காலங்களில் அவர்களுக்கு இந்த அரசு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. இந்த கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு தங்களுக்கும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும்-நம் மாநிலத்திற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பாராட்டியிருந்தார். 

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தின் போது உதவி செய்த நஞ்சப்பா சத்திரம் கிராம மக்களுக்கு விமானப்படை அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர். அதாவது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாது. இதனால் ஹெலிகாப்டர் விபத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் அனைவரும் கடும் சிரமங்களை சந்தித்தனர். அந்த நேரத்தில் நஞ்சப்பா சத்திரம் கிராம மக்கள் துரிதமாக செயல்பட்டு மீட்புப் படையினருக்கு உதவி செய்தனர். இந்நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்த விமானப்படையினர் நஞ்சப்பா சத்திரம் கிராம மக்களுக்கு அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினர். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அவர்களுக்கு விமானப் படை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டன.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இது நடைபெற்றது. இந்நிலையில் கிராம மக்கள் திரட்டி அவர்களுக்கு ராணுவ வீரர்கள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி குன்னூரில் நடைபெற்றது. அதில் பேசிய ராணுவ வீரர்கள் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது தக்ஷின் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டிணட் ஜெனரல் திரு. அ. அருண், பேசுகையில் கிராம மக்களாகிய உங்களுக்கு நன்றி தெரிவிக்க நாங்கள் நேரில் வந்திருக்கிறோம், நான் இந்த கல்லூரியில் படித்தேன், ஆனால் உங்கள் கிராமத்திற்கு வந்ததில்லை. நமது ராணுவ வீரர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

நீங்கள் மட்டும் உதவி செய்யாமல் இருந்திருந்தால் அது ஹெலிகாப்டரில் இருந்து ராணுவ வீரர்களின் உடல்களை மீட்க முடிந்திருக்காது. ஒரு விபத்து நடக்கும்போது அங்கு சென்று உதவி செய்பவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். விமானம் கீழே விழுந்ததும், பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அதில் சிக்கியிருந்த வீரர்களை உங்கள் வீடுகளில் இருந்த பெட்ஷீட், கம்பளி போன்ற பொருட்களைக் கொண்டு வந்து நீங்கள் உதவி செய்தீர்கள். உலகத்தில் எங்கு தேடினாலும் இதுபோன்ற ஒரு உதவி கிடைத்திருக்காது. இதுபோன்ற கிராமம் கிடைக்காது, அதனால் நான் மீண்டும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் அந்த கிராம மக்களை கையெடுத்து கும்பிடும் நன்றி தெரிவித்தார்.

நமது நாட்டில் இது போல ஒரு கிராமம் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய தூண்டுகோலாக இருக்கிறது. உங்களைப் போன்ற குடிமக்கள் இருக்கும் வரை எங்களைப் போல ராணுவ உடை அணிவதற்கு நிறைய இளைஞர்கள் முன் வருவார்கள். நீங்கள் செய்த உதவி எல்லோராலும் செய்ய முடியாது. தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை செய்த சேவையை எங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எத்தனையோ அரசுத்துறைகள் வந்திருந்தாலும் முதலில் வந்து உதவிய மக்களாகிய நீங்களே மிகச் சிறந்தவர்கள் என்று நாங்கள் சொல்ல முடியும். அதனால்தான் நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கிறோம். நீங்கள் செய்த உதவிக்கு எங்களுக்கு அதற்கு இணையாக கைமாறி எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.