ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி திமுக எம்.பி தயாநிதிமாறனுடன் அரசியல் ரீதியிலான தொடர்பில் இருந்தவர் என்பதை பத்திரிக்கையாளர் ஒருவர் உறுதி செய்திருக்கிறர்.

 

அர்ஜுனமூர்த்தி முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்துள்ளார் என்கிற தகவல் வெளியானது. அந்த தகவலை முரசொலி மாறனின் மகனும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் ரஜினிகாந்தால் துவங்கப்படவுள்ள அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளாராக நியமிக்கப்பட்டு அர்ஜுன மூர்த்தி எனது தந்தை மறைந்த முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்ற செய்தியை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல், அதுபோன்று எவரும் எனது தந்தையின் அரசியல் ஆலோசகராக இருந்ததில்லை” என்று தெரிவித்து இருந்தார். ஆனால் இப்போது தான் தெரிய வந்துள்ளது, அர்ஜுன மூர்த்தி முரசொலி மாறனுக்கு ஆலோசகராக இல்லை அவரது மகன் தயாநிதி மாறனுக்கு அரசியல் ஆலோசகராக இருந்துள்ளார் என்கிற விவரம்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் கதிரவன் தனது முகநூல் பக்கத்தில், ’’அர்ஜூனமூர்த்தியுடன் என் ஒரு நாள் அனுபவம்... சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பிக்கவிருக்கும் புதிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவர் அர்ஜூனமூர்த்தி நியமிக்கப் பட்டுள்ளார் என்ற தகவலை என் நண்பர் ஒருவர் எனக்கு வாட்ஸப்பில் அனுப்பியதும் இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல தெரிகிறதே? என்ற கேள்வியுடன் என் நினைவலைகளை ஒரு முறை திரும்பிப் பார்த்தேன்.....ஆம் அவர் தான் இவர்! 
அப்போ யார் இவர்? 

2005 காலகட்டத்தில் நான் ஜூனியர் விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்....அப்போதைய மதிமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரான அண்ணன் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது...”கதிரவன்...எனக்கு வேண்டிய ஒரு நண்பர் இன்று மதியம் சென்னையில் இருந்து மதுரை பிளைட்டில் வருகிறார்...நீங்கள் ஒரு ஆடம்பர சொகுசு காரை எடுத்துக் கொண்டு மதுரை விமானநிலையம் சென்று அவரை அவர் சொல்லும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.....மிக மிக முக்கியமான நபர்....அவர் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்....நீங்களாக உங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று எனக்கு ஒரு வகுப்பே எடுத்தார். அந்த முக்கியப் பிரமுகரின் பெயர் அர்ஜூனமூர்த்தி என்று சொல்லி அவரது அலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

அண்ணன் கேஎஸ்ஆர் சொன்னவாறே நான் ஆடம்பர சொகுசு காருடன் மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தேன்...ஆஜானுபாகுவான உயரத்துடன் இருந்த ஒருவர் என் அருகே நின்றபடியே யாருக்கோ போன் செய்தார்! என் கையில் இருந்த அலைபேசி ஒலித்தது....உடனே அவர் சற்றும் யோசிக்காமல்,  நீங்கள் தான் கதிரவனா? என்றார். நான் ஆமாம் என்றதும், ஐ யாம் அர்ஜூனமூர்த்தி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடன் வந்தவரை திரைப்பட நடிகர் அசோகன் அவர்களது மகன் என்று அறிமுகம் செய்து வைத்தார். 

அவர்கள் இருவரும் நான் கொண்டு வந்த காரில் ஏறிஅமர்ந்தனர். அர்ஜூனமூர்த்தியும் நானும் அருகருகே ஒரே இருக்கையில், காரை சிவகாசியை நோக்கிச் செலுத்தச் சொன்னார். தொடர்ந்து அரசியல் நிலவரங்கள் குறித்தே என்னிடம் பேசிக் கொண்டு வந்தார். திடீரென அவருக்கு வந்த போனில், “என்ன அன்பு? என்று உரிமையாகப் பேசிக்கொண்டே, என்னிடம் விசாரித்த அரசியல் நிலவரங்களை எதிர்முனையில் இருந்தவரிடம் பகிர்ந்து கொண்டே என்னிடம் போனைக் கொடுத்து எதிர்முனை நபரிடம் பேசச் சொன்னார். எதிர்முனையில் இருந்தவர், “வணக்கங்க....நான் தயாநிதிமாறன் பேசறேன்” என்றவுடன் அப்படியே நான் ஷாக் ஆகிட்டேன். அர்ஜூனமூர்த்தி சைகையால் என்னைப் பேசச் சொன்னார். அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் பத்திரிக்கையாளர் என்ற முறையில் எனக்குத் தெரிந்த விபரங்களைச் சொன்னேன்.

பேசி முடித்ததும் என் மனதில், “அடடா மிகப் பெரிய திமிங்கலத்திடம் வந்துல்ல சிக்கிக்கிட்டோம். அலர்ட்டா இருடா கதிரவா!” என்று என் மனசாட்சி என்னை எச்சரித்தது. அதன் பின்னர் அவர் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு அமைதி காத்தேன். அதைக் கவனித்த அவர், “என்ன கதிரவன் அலார்ட் ஆகுறீங்களோ?” என்றார். அப்படி ஒன்றும் இல்லையே சார் என்றேன் நான். இல்லையில்லை உங்கள் முகத்தை நான் படித்து விட்டேன். கேஸூவலாக நீங்கள் கலகலப்பாகப் பேசுவது எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது என்றார். நான் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள் அவர் குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், கலாநிதிமாறன் மற்றும் சில முக்கியத் தலைகளிடம் பேசிவிட்டு என்னை நோக்கினார். 

சிவகாசி அய்யனார் காலனியில் உள்ள ஓரியண்ட் அச்சகத்தின் முன்பாக நாங்கள் வந்த வண்டி நின்றது. அதில் இருந்து இறங்கிய அர்ஜூனமூர்த்தி பிஎஸ்என்எல் பிரிப்பெய்டு கார்டு பிரிண்ட் செய்யும் பிரிவுக்குச் சென்றார். ஆர்டர் செய்யப்பட்டுள்ள கார்டுகளை விரைவில் டெலிவரி செய்ய தோரணையோடு உரிமையாளருக்கு உத்தரவிட்டார். பின்னர் காரில் ஏறியதும் பிஎஸ்என்எல் பிரிப்பெய்டு கார்டுக்கு தான் தான் மொத்த விநியோகஸ்தர் என்ற உண்மையை உடைத்தார்.

அவர் அப்போதே மிகப் பெரிய தலைகளிடம் மிகச் சாதாரணமாகப் பேசிய போதிலும் என்னிடம் ஒரே நாளில் மிகமிக இயல்பான நட்புடன் பேசவே, நானும் அவருக்கு ஈடுகொடுத்துப் பேசிக் கொண்டே வந்தேன். வண்டி மதுரையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதி முன்பாக நின்றது. அவரும், அவரது நண்பரும் உள்ளே சென்று ரிலாக்ஸ் செய்து கொண்டனர். நாங்கள் மூவரும் அந்த விடுதியின் ரூப்டாப்பில் அமர்ந்து உணவருந்தினோம். நிறைய அரசியல் பேசினோம். பின்னர் சென்னை செல்லும் பாண்டியனில் அவரை வழியனுப்பி விட்டு நான் ஊர் வந்து சேர்ந்தேன்.

 

மறுநாள் காலை அண்ணன் கேஎஸ்ஆரிடம் இருந்து போன்” ரொம்ப நன்றி கதிரவன்! அர்ஜூனமூர்த்தி உங்களைப் பற்றி ரொம்ப பெருமையாச் சொன்னார். நல்ல அரசியல் அனுபவம் உள்ள ஒரு பத்திரிக்கையாளரை அனுப்பி வச்சீங்கன்னாரு. அவர் கூட இருந்த 7 மணி நேரம் எப்படிப் போச்சுன்னே தெரியல. அவ்வளவு நல்லாப் பேசிட்டு வந்தாருன்னாரு! நான் உங்க மேல வச்ச நம்பிக்கையைக் காப்பாத்திட்டீங்க”என்றார் பெருமை பொங்க.

அதன் பின்னர் ஓரிரு முறை என் லைனில் வரும் அர்ஜூனமூர்த்தி நீண்ட நேரம் அரசியல் குறித்த களநிலவரங்களை ஆர்வமுடன் விசாரிப்பார். 2006 தேர்தலுக்குப் பின்னர் அவர் என் தொடர்பில் இல்லை. அந்த அர்ஜூனமூர்த்தி தான் இவர் என்ற போது என் மனம் மகிழ்கிறது. ஒரு நாள் பழகினாலும் என் நண்பரல்லவா? ரஜினியின் தேர்வு சரியே. பல்வேறு இயக்கத் தலைவர்களுடன் பழகிய அனுபவம். அடிமட்ட மக்களின் மனநிலையை துல்லியமாக நாடி பார்க்கத் தெரிந்த நேர்த்தி, கட்சி நடத்தத் தேவையான பணத்தைக் கையாளத் தெரிந்த வித்தை. இவற்றின் மொத்த உருவம் தான் அர்ஜூனமூர்த்தி. ரஜினியின் கட்சியை வலுவாகக் கட்டமைக்கும் திறன் கொண்டவர் அர்ஜூனமூர்த்தி என்ற கருத்துக்கு மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. பார்க்கலாம்... களத்தில் நண்பர் அர்ஜூனமூர்த்தியின் செயல்பாடுகளை!''எனப்பதிவிட்டுள்ளார்.