சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை வள்ளுவன் கோட்டையாக மாற்றவோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை ராயப்பேட்டையில் ஆன்மிக அரசியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டை நடிகர் எஸ்.வி.சேகர் தொடங்கி வைத்தார். மாநாட்டுக்கு தலைமை வகித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கி பேசுகையில், “தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு மாற்று தேவை. அதற்காகவே தேசிய அரசியலை, ஆன்மிகம் சார்ந்த வளர்ச்சி அரசியலை கொண்டு வர இந்த மாநாடு நடக்கிறது. தமிழகத்தையும் தமிழர்களையும் வஞ்சிக்கும் அரசியலுக்கு மாற்றாக ஆன்மிக அரசியலை முன்னிறுத்துவதே நோக்கம். செயின்ட் ஜார்ஜ் கோட்டையை வள்ளுவன் கோட்டையாக மாற்றவும் இந்த மாநாடு நடக்கிறது.
இனியும் இந்து மத தெய்வங்களை யார் இழிவுபடுத்தினாலும் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அதை வியூகம் வகுத்து தடுப்போம். பிரதமர் மோடி மீதுள்ள வெறுப்பால், தமிழகத்தின் வளர்ச்சியை சிதைக்கிறார்கள். ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நடிகர் ரஜினிக்கு மக்கள் ஆதரவு பெருகிவருகிறது. ஆனால், அவர் அரசியலுக்கு வருவதை எதிர்க்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வருவதில் தவறு எதுவும் இல்லை. தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆன்மிக அரசியல் எழுச்சி பெறுவதன் மூலம் அற்புதமும் அதிசயமும் நடக்கும்.” என்று அர்ஜூன் சம்பத் பேசினார்.