சபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ள விவகாரத்தில், கேரள அரசை உடனே டிஸ்மிஸ் செய்து முதல்வர் பிரணாயி விஜயனைத் தூக்கிலிட வேண்டும்’ என்று வெறிகொண்டு அறிக்கை கொடுத்திருக்கிறார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அதையொட்டி கடந்த இரு மாதங்களாக சபரிமலைக்கு பெண்கள் செல்ல முயல்வதும் அதை போலிஸாரும் பக்தர்களும் முறியடிப்பதுமாக பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், இன்று அதிகாலை 3:45 மணியளவில் பிந்து (42), கனக துர்கா (44) என்ற இரண்டு பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்து ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்துள்ளனர். அச்செய்தி பா.ஜ.க. மற்றும் இந்து ஆர்வலர்களின் பி.பி.யை எகிறவைத்துள்ளது. தரிசனம் செய்தவர்களும் அதை ஆதரிப்பவர்களும் ரத்தம் கக்கிச் சாகவேண்டும் என்ற வேண்டுதல்களும் நிகழ்கின்றன.

இதுகுறித்து வழக்கத்தை சற்று ஓவராக உணர்ச்சி வசப்பட்டு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘கோடிக்கணக்கான பக்தர்களின் மனம் புண்படும்படியாக, மற்ற மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்து பதினெட்டாம் படி வழியாக சன்னிதானத்திற்குள் அழைத்து வந்தது ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமானப் படுத்துவதுபோல் உள்ளது. மோடி அரசு இதை அனுமதிக்கக் கூடாது; பினராயி விஜயன் அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவேண்டும்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பாக நாளை (3ம் தேதி) கேரளா செல்லும் பேருந்துகளை சிறைப் பிடிக்கும் போராட்டம், கேரளா செல்லும் ரயில்களை மறிக்கும் போராட்டம் ஆகியவற்றுடன் காலவரையற்ற முறையில் நான் உண்ணாவிரதத்தை துவங்க உள்ளேன்.

தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. பினராயி விஜயனுக்கு எதற்கு இந்த அவசரம். நாங்கள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். உச்சநீதிமன்றம் சொன்னதையெல்லாம் பினராயி விஜயன் செய்து விட்டாரா..? மசூதிகளில் குழாய் வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாதென்று சொல்லியிருக்கிறார்கள். பினராயி அதை அமல்படுத்திவிட்டாரா..?

இது வேண்டுமென்றே, அய்யப்ப பக்தர்களை கொடுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், நாட்டைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், பினராயி விஜயன் நக்சலைட் தீவிரவாதியாக செயல்பட்டிருக்கிறார். அரபு நாட்டிலிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு பினராயி விஜயன் செயல்பட்டிருக்கிறார். அவர் அரபு நாட்டின் கைக்கூலி. இதுபோன்ற செயலுக்காக பினராயி விஜயனை தூக்கிலிட வேண்டும்” என்றார்.