கள்ளக்குறிச்சியைத் தொடர்ந்து அரியலூரில் நடைபெற உள்ள மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கும் தொகுதி எம்.பி. அழைப்பு விடுக்கப்படவில்லை.
புதிதாக அமைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் விழா கடந்த வாரம் காணொலி காட்சி மூலம் சென்னையில் நடைபெற்றது. சென்னையில் கோட்டையில் இருந்தபடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்வில் உள்ளூர் அமைச்சரான சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கு தொகுதி எம்.பி.யான தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கெளதம சிகாமணி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

 
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட காணொலி காட்சியில், “ தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வழியாக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்ததாக செய்திகள் வழியாக அறியக் கிடைத்தது. சென்னை தலைமைச் செயலக நிகழ்ச்சியில் முதல்வர், சட்டத்துறை அமைச்சர், மருத்துவத்துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதே வேளையில் கள்ளக்குறிச்சி நகரில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மருத்துவக் கல்லூரி வேண்டும் என பல முறை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த எனக்கு இது குறித்த எந்தத் தகவலோ, அழைப்போ அனுப்பப்படவில்லை.” என்று தனது ஆதங்கத்தைத்தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் எம்.பி. என்ற முறையில் தமக்கு எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை என்று தொகுதி எம்.பி.யான தொல்.திருமாவளவன்     தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய பதிவில், “அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது. தொகுதியின் மக்கள் பிரதிநிதி (MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநில அரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப்படவில்லை. இந்த அரசியல் அணுகுமுறை ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு” என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.