நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று போராடி தோல்வி அடைந்ததால், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அனிதாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் அறிவித்ததையடுத்து கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

தமிழக அரசு எவ்வளவோ முயன்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. இந்த ஓர் ஆண்டு மட்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முதலில் அறிவித்தார்.

ஆனால் மத்திய அரசு தமிழக மாணவர்களை நம்ப வைத்து கழுத்தறுத்தது. இதனால் மனமுடைந்த அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ் 2வில் 1176 மதிப்பெண்கள், மருத்துவ கட்-ஆப் 196.5 ஆகியவை அனைத்தும் வீணாகிப் போனதால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணம் நாட்டையே உலுக்கியுள்ளது..

இனியும் மாணவர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போடும் வகையில் அரசுகளின் செயல்பாடு இருக்கக் கூடாது என்று வன்மையாக கண்டித்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அனிதாவின் உடல் அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அனிதாவின் உடல் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாணவி அனிதாவின் மரணம் குழுமூரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.