தமிழகத்தில் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கு முன்பு திமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவைச் சேர்ந்த வன்னியரான கே.பி.முனுசாமி பேச்சு வார்த்தை நடத்தில் பாமகவை அதிமுக கூட்டணிக்கு கொண்டு சென்றார். பொதுவாக தமிழக மக்களிடையே இந்த கூட்டணி கடுமையாக விமர்சனத்தைப் பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தி.மு.க., கூட்டணி முன்னிலை வகிக்கிறது என்ற தகவல் வெளியானதும் சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கும் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கும் திரண்டு வந்தனர்.

பின்னர் மேளதாளம் முழங்க ஆடி பாடினர்.வீட்டிற்கு முன் எந்த ஆட்டமும் வேண்டாம் என ஸ்டாலின் வீட்டில் இருந்த சிலர் சொன்னதும் அங்கு கூடிய தொண்டர்கள் நேராக அறிவாலயத்திற்கு வந்தனர். 

அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மாம்பழத்தை நசுக்கி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பா.ம.க. தோல்வியை கொண்டாடும் வகையில் அக்கட்சியின் சின்னமான மாம்பழத்தை காலில் போட்டு மிதித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.