5 மாதங்களாக வியாபாரம் இல்லாததால்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிக்கும் 150,300 ச.அடி கடை வியாபாரிகள் இன்று கோயம்பேடு சந்தை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் அது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது: 

5 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வியாபாரம் இல்லாததால் சுமார் 15 ஆயிரம் வியாபாரிகளும் எங்களை நம்பியுள்ள குடும்ப உறுப்பினர்கள் கிட்டதட்ட 50 ஆயிரம் பேர்வரையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை. நாங்கள் மேற்கொள்ள உள்ள போராட்டங்கள் அறவழியில் நடைபெறும், அதன் முதல் கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அவர்கள் அறிவித்துள்ளனர். 

கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை காரணம் காட்டி  கோயம்பேடு  சந்தை  மொத்தமும் மூடப்பட்டது, பிறகு படிப்படியாக திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய விற்பனையகத்தை  திறந்தனர். பின்பு மொத்த வியாபாரிகள் சந்தையும் திறக்கப்பட்டது. 10 நாட்களில், அனைத்து சிறு மொத்த வியாபார கடைகளும் திறக்கப்படும் என அறிவித்தனர். ஆனால் பத்து நாட்கள் கடந்தும் இன்னும் சிறு மொத்த வியாபாரிகளின் கடைகள் திறக்கப்படவில்லை. ஆறு மாத காலமாக வாழ்க்கை நடத்த போராடிக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசு அறிவித்த நிதி உதவியும் இன்னும் கிடைக்கவில்லை. முற்றிலும் வாழ்வதாரம் இழந்து தவித்து வருகிறோம் என ஆதங்கம் தெரிவித்துள்ளனர். 

கொரோனா நெருக்கடியிலும் முதலமைச்சர் டாஸ்மாக்கை எப்படி திறந்தார்கள், சினிமா தியேட்டர், பொழுதுபோக்கு அம்சங்கள் திறக்கப்பட்டுள்ளது, இதுவரை பல முறை அரசுத் தரப்பில் அதிகாரிகளை சந்தித்து எங்களது கோரிக்கைகளை முன்வைத்தும் இதுவரை அதிகாரிகள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. எங்களது கோரிக்கை கேட்கப்படும் வரை தொடர் போராட்டம் நடைபெறும். முதற்கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 1260 காய் கறி கடைகள், 760 பழக்கடை ,500 பூ கடைகள் உள்ளன. மொத்தம் 3000 கடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

கடை திறக்கப்படாமல் இருப்பதால் சுமை தூக்கும்  தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் அதை நம்பி 50 ஆயிரம் உயிர்கள் பாதிப்படைந்துள்ளது. இப்போது ஒன்றுமே புரியாமல் வாழ்வதற்கு வழி இல்லாமல் நிற்கிறோம். அரசு தரப்பில் இதற்கு விரைவில் சரியான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லை என்றால்  தொடர் போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.