தூத்துக்குடி தொகுதி எம்.பி கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் பேசியுள்ளார். அதற்கு கனிமொழி, ‘தனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள்’ எனக் கேட்டுள்ளார். ஆனால், அந்த அதிகாரி கனிமொழியை பார்த்து, ‘நீங்கள் இந்தியர்தானே..?’ இந்தி தெரியாதா எனக் கேட்டதாக கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்திருந்தார்.

 
இந்த நிகழ்வுக்கு கனிமொழிக்கு ஆதரவாக பல தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில்  திமுக எம்.பி. தயாநிதி மாறன் கனிமொழிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கனிமொழிக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு விமான நிலையத்திலும் இதுபோன்றுதான் நடைபெற்று வருகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை. அப்படியென்றால், சாதாரண மக்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுவார்கள்? இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்கள் என கூறுவது மிகவும் கண்டனத்துக்குரியது.


இந்தப் பிரச்னையை உரிய இடத்துக்குக் கொண்டு செல்வோம். இதுபோன்ற இடங்களில் அந்தந்த மாநில மொழி பேசுகிறவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். பாஜகவினர்தான் தேவையில்லாமல் சர்ச்சை பேச்சுகளை பேசிவருகிறார்கள். அவர்கள் பாஜக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளதாக கற்பனையில் உள்ளார்கள்” என்று தயாநிதி மாறன் தெரிவித்தார்.
இதேபோல முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் கனிமொழி கண்டனம்  தெரிவித்துள்ளார். “கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும். மத்திய அரசு பணியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.