அடேங்கப்பா... மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத் குமார் கட்சிக்கு இத்தனை சீட்டுக்களா..?
இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்கு செலுத்துவோர் மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு மாற்றாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினரால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி , ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கமலின் தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளன. இக்கட்சிகளிடையேயான தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றே நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் நடக்க உள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயக கட்சியும் கமலின் தலைமையிலான 3வது அணிக்கு உறுதுணையாக நிற்கின்றனர். இதனையடுத்து மேலும் சில கட்சிகளை இந்தக் கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக தெரியவந்துள்ளது. அதன்படி சமத்துவ மக்கள் கட்சிக்கு 34 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐஜேகேவுக்கு 34 தொகுதிகள் வழங்க முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினரால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் 15 முதல் 18 தொகுதிகள் கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்றே இது தொடர்பாக பேச்சுவார்தை நடைபெற்ற நிலையில் இன்று உடன்படிக்கை கையெழுத்தாகும் என தெரியவந்துள்ளது. முன்னதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ்நாடு இளைஞர் கட்சி தனித்து போட்டியிட்டது. இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்கு செலுத்துவோர் மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.