வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை அந்நியக் கைக்கூலிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் மத்திய அரசு இழிவு செய்து வருகிறது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யும் வரை விவசாயிகளுக்கு ஆதரவான தங்களது போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு சட்டத்தை திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் முடிவுறாது எனவும் அவர்கள் தீர்க்கமாக இருந்து வருகின்றனர். சட்டத்தையே முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகவே தாங்கள் போராடுவதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். ஆனால் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு தயக்கம்காட்டி வருகிறது. 

இதனால் விவசாயிகள் டெல்லியின் கடும் குளிரிலும், உறக்கமின்றி, சரியான உணவின்றி தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். விவசாயிகளின் அறவழி போராட்டத்திற்கும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அறவழியில், திமுக தலைமையிலான அறவழி உண்ணாவிரத போரட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது அதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

அதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு:  மத்திய அரசு விவசாயிகளின் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது, கொரோனா காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவசரஅவசரமாக மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப் படுகின்றன, லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் டெல்லி மாநகரமே கொதித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாக போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். மத்திய பாஜக அரசு யாரைப் பாதுகாக்க இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது என கேள்வி திமுக ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை மத்திய அரசை அந்நியக் கைக்கூலிகள் என்றும், தேச விரோகிகள் என்றும் முத்திரை குத்தி வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப் பெறு என அச்சிடப்பட்ட மாஸ்க்குகளை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.