Are ministers throwing stones and throwing stones
முரண்பாடுகளின் கோட்டையாகி நிற்கிறது ‘அ.தி.மு.க.’. ஒரு விவகாரத்தை அ.தி.மு.க. அமைச்சரவையின் ஒரு அமைச்சர் ஒரு கோணத்தில் பார்த்து சப்போர்ட் செய்ய, இன்னொரு அமைச்சரோ அதற்கு எதிர் கோணத்தில் பார்த்து கடுமையாக விமர்சனம் செய்திருப்பது அதிர வைக்கிறது.

’எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும், கல் எறிய தெரியும்’ என்று ஜீயர் சடகோபா ராமானுஜர் பேசியிருக்கும் விவகாரத்தை அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்தும், மற்றொரு அமைச்சரான ராஜேந்திர பாலாஜி ஆறுதல் சொல்லும் தொனியிலும் பேசியிருக்கும் விவகாரம்தான் அது...

ஜெயக்குமாரோ “ யாராக இருந்தாலும் பொறுப்புடன் பேசவேண்டும். ஜனநாயக நாட்டில் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என பேசக்கூடாது. அதை அனுமதிக்கவும் முடியாது. சட்டத்தை யாரும் கையிலெடுக்க கூடாது. நீதிமன்றம் உள்ளது.
ஒருவர் தவறு செய்திருந்தால் அவரை எப்படி கையாளுவது? என்பது சட்ட விதிகளில் சொல்லப்பட்டு இருக்கிறது. தவறு செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவதே ஜனநாயக மரபு. ஆனால் சோடா பாட்டில் வீசுவேன், கல் எறிவேன் என்று பேசுவது பொறுப்பான பேச்சு கிடையாது.” என்று கொதித்திருக்கிறார்.

ஆனால் அவரது அமைச்சரவை சகாவான ராஜேந்திர பாலாஜியோ “ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் கோபமடையும் அளவிற்கு இந்து கடவுள்களை விமர்சனம் செய்து பேசியது தவறு. விஜயேந்திரன் யோகாவில் இருந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்கவில்லை. இதனை பெரிய விஷயமாக பார்க்க வேண்டியதில்லை.” என்று ஜீயருக்கும், காஞ்சி மடாதிபதிக்கும் ஆறுதலாக பேசியிருக்கிறார்.
ஒரு சர்ச்சையில் ஒரு அமைச்சரவையை சேர்ந்த இரண்டு அமைச்சர்களின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பது கடைசியில் மக்களைத்தான் குழப்பி இருக்கிறது. ஒரு பொது விவகாரத்தில் இப்படி முரண்பாடாக பேசிக் கொண்ட இவ்விரு அமைச்சர்களும், நாளைக்கு தங்களுக்குள் ஏதேனும் பிரச்னை என்றால் சோடாபாட்டில் வீசி, கல் எறிய மாட்டார்களா? என்று இந்த விஷயத்தை தினகரன் அண்ட்கோ போட்டு வறுப்பது தனி கதை.
