‘மக்களை ஏமாற்றிவிட்டார் மோடி’….டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு

பிரதமர் மோடியின் புத்தாண்டு உரையில் கடந்த 50 நாட்களாக கருப்புபணம் எவ்வளவு பிடிபட்டது?, வங்கி, ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் ஏன் நீக்கப்படவில்லை? என்பது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. ஒட்டு மொத்தமாக மக்களை மோடி ஏமாற்றி விட்டார் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

50 நாட்கள்

கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில் நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார்.

அதன்பின் மக்கள் வங்கிகள், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. டிசம்பர் 30ந் தேதி வரை மக்கள் பொறுமையாக இருந்தால் அதன்பின் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என பிரதமர் மோடி உறுதியளித்து இருந்தார்.

புத்தாண்டு உரை

இதையடுத்து, மக்களுக்கு நேற்றுமுன்தினம் புத்தாண்டு உரையாற்றினார். அதில் கருப்புபணம் பிடிபட்டது குறித்தோ?, பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவது குறித்தோ அறிவிக்கப்படவில்லை. மக்களுக்கு சில சலுகை திட்டங்களை மட்டும் அறிவித்தார்.

நிவாரணம் இல்லை

இது குறித்து ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், “ ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வேதனைகளுக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் பிரதமர் மோடி தனது உரையில் கூறவில்லை.

கேலிக்கூத்து

புத்தாண்டு உரையில், பிரதமர் மோடியின் உரையில் எந்தவிதமான சுரத்தும் இல்லை, விசேஷமும் இல்லை. மோடி கூறும் எதையும் நம்ப மக்கள் நிறுத்திவிட்டனர். சர்வதேச அளவில் அவரின்செயல்பாடுகள் கேலிக்கூத்தாகிவிட்டன.

ஏமாற்றம்

பிரதமர் மோடி ஒட்டுமொத்த நாட்டையும், மக்களையும் ஏமாற்றிவிட்டார். கடந்த 50 நாட்களில் ஒரு ரூபாய் கருப்புபணம் கூட மீட்கப்படவில்லை, அதனால், ஊழலும் குறைந்துவிடவில்லை. மக்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் மோடி.

மோடியின் விஷயம் இல்லாத சுரத்தை இல்லாத பேச்சை மக்கள் பொறுமையுடன், நம்பிக்கையுடன கேட்டுக்கொண்டு இருந்தனர். வங்கி, ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாடுகளை நீக்கி அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கடைசியில் மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துவிட்டனர்'' எனத் தெரிவித்தார்.