எடப்பாடி பழனிசாமிக்கு  எதிராக டி.டி.வி.தினகரன் தலைமையில் 19 எம்எல்ஏக்கள் களம் இறங்கியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு எம்எல்ஏ தினகரனுக்கு ஆதரவளித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் அணியினர் தமிழக அரசுக்கு எதிராக தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். தினகரனின் ஆதரவாளர்களான 19 எம்எல்ஏக்கள்  ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடிதம் அளித்தனர்.

இதையடுத்து தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர  வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த 19 எம்எல்ஏக்களும் புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் விட்டுவிட்டு கட்சியையும், ஆட்சியையும்  நடத்த முடியாது என தெரிவித்தார்.

கட்சிக்கும், ஆட்சிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கட்சியை உடைத்த ஓபிஎஸ்சை மீண்டும் கட்சியில்  சேர்க்கும்போது, அதிமுகவை ஒன்றிணைத்து வழி நடத்திய சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் கட்சியை விட்டு நீக்குவதாக கூறுவது சரியில்லை என ரத்தின சபாபதி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.