சதுரங்க வேட்டை பாணியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்த ராஜா என்பவர் பாஜகவில் இணைந்துள்ளது அக்கட்சியினருக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அரியலூர் அருகே ஒரு காரின் கதவுக்குள் வைத்து  தேர்தல் அதிகாரிகள் சுமார்1 கோடியே 99 லட்சத்து 71,500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணத்திற்கு சொந்தக்காரர் தற்போது தன்னை மக்கள் அரசர் என்றும் அறம் மக்கள் நல சங்கம் தலைவர் என்றும் கூறிக்கொள்ளும் திருச்சி ராஜா என்பவர் ஆவார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தார். விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் செலவிற்காக பணத்தை கொண்டு சென்ற போது தான் ராஜாவின் கார் சிக்கியதாக அப்போது பேச்சுகள் அடிபட்டன.

பிறகு இந்த விவகாரத்தில் ராஜா சைலன்ட் ஆனார். தேர்தல் முடிந்து சுமார் ஓராண்டு ஆன நிலையில் தற்போது திருச்சி சுற்றுவட்டாரத்தில் அறம் மக்கள் நல சங்கம் என்கிற பெயரில் பிரமாண்ட பேனர்கள், நாளிதழ் விளம்பரங்கள், லோக்கல் டிவி சேனல், யூட்யூப் சேனல் என்று ராஜாவின் பெயர் அடிபடுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து இவர் விலகிவிட்டதாக சொல்கிறார்கள். அண்மையில் கூட கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரணத்திற்கு சுமார் 50 லட்சம் ரூபாயை கொடுத்தார் இந்த ராஜா.

இந்த அளவிற்கு தாராள மனம் படைத்தவரையா சதுரங்க வேட்டை நாயகனுடன் ஒப்பிடுகிறீர்கள் என்று  கேட்கலாம். ஆனால் அந்த 50 லட்சம் ரூபாய் எப்படி வந்தது என்பது தான் பில்லியன் டாலர் கேள்வி. ஏனென்றால் ராஜா மீது திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் என அருகாமை மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஏராளமான மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அத்தனையுமே பொதுமக்களிடம் இருந்து பணத்தை முதலீடாக பெற்று திருப்பித்தராமல் ஏமாற்றிவிட்டார் என்பது போன்ற புகார்கள் தான்.

உதாரணத்திற்கு, Rmwc என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து அதனை Mlm கான்செப்ட் மூலமாக பலரையும் முதலீடு செய்ய வைத்தனர். ஆனால் 2010ம் ஆண்டு இந்த வேலையில் ஈடுபட்டு வந்த ராஜா தலைமறைவாகிவிட்டார். பணத்தை முதலீடு செய்த பலர் இவர்கள் மீது காவல் நிலையங்களில் புகார் கொடுத்து அனைத்தும் விசாரணையில் உள்ளது.

மிகவும் சிறப்பான முறையில் நடத்தியவர் தான். திருச்சி கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த அழகர்சாமி என்ற ராஜா, மற்றும் அவரின் தம்பி எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார். அதன் பின் எல்ஃபின் இ.காம் நிறுவனம் எனும் பெயரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் மற்றும் ஆன்லைன் விற்பனை எனும் பெயரில் ஆன்-லைன் மளிகைப் பொருள் விற்பனை, வெளிநாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல், ரியல் எஸ்டேட் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கும் திட்டம் ஏராளமான திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் ரூ.15 லட்சத்துக்கும் மேல் வசூலித்து மோசடி செய்ததாகக் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி, 50-க்கும் மேற்பட்டோர் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவில் ராஜா மீது புகார் அளித்தனர்.

பிறகு ராஜாவை போலிஸ் வலைவீசித் தேடியது. இவரோ  எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டர். தற்போது இவர்களின் புதிய திட்டம், இவர்கள் ஆரம்பிக்கும் (?) அனைத்து விதமான தொழில்களிலும்  2000 பேர் மட்டும் ரூ.36,000கட்டி உறுப்பினராக சேர வேண்டும் (Share Holder) அவர்களுக்கு இவர்களின் நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தில் வாழ்நாள் ( யார் வாழ்நாள் முழுவதும் என தெரியவில்லை) முழுவதும் ஷேர் வழங்கப்படும் எனக்கூறி பணம் வசூல் செய்து வருகின்றனர். இதில் முதலில் பணம் தங்க மோதிரம் போன்ற பரிசுகள் வழங்க உள்ளதாக எல்பின் இயக்குனர் ராஜா அறிவித்துள்ளார்.

இந்த விஷயம் எப்போது பூதாகரமாகும் என்று தெரியவில்லை. ஆனால் கொடுமை என்ன என்றால் ராஜா இப்போது தான் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் பாஜகவில் இணைந்ததை அறிந்து திருச்சி மாவட்ட பாஜகவின் கொதித்து போய் உள்ளனர். காரணம் இவ்வளவு மோசடிபுகார்களை சுமந்து கொண்டிருக்கும் ஒரு நபரை எப்படி பாஜகவில் சேர்க்கலாம் என்று மாநில தலைவர் முருகனுக்கு எதிராக கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. இந்த விஷயங்களை எல்லாம் மறைத்து ராஜாவை முருகனுக்கு அறிமுகம் செய்து வைத்தது யார்? உண்மையில் எதுவும தெரியாமல் முருகன் ஏமாந்துவிட்டாரா? அல்லது ஏமாற்றப்ப்டடாரா? என்றும் திருச்சி மாவட்ட பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.