அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருந்த பகுதியில் சிசிடிவி கேமராவை நிறுத்தி வைத்திருந்தோம், பாதுகாப்பு நலன் கருதி மற்ற நோயாளிகளை இடம் மாறினோம் என அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.   

ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு அது பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு தரப்பினர் சந்தேகக் குரல் எழுப்பிய நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தது தமிழக அரசு. அந்த கமிஷனும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நெருக்கமானவர்கள் என ஒவ்வொருவரையும் விசாரணை வளையத்தில் கொண்டுவந்தது.

 சசிகலா உறவினர்கள், அதிகாரிகள் மருத்துவர்கள் என ஆஜாராக விளக்கம் அளித்த நிலையில் சசிகலா மட்டும் ஆஜராகவில்லை இதற்க்கு பதிலாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 55 பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ததில் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் டிசம்பர் 5-ஆம் தேதி வரை நடந்தது என்ன என்பது குறித்து விவரங்களை குறிப்பிட்டிருந்தார்.

இந்த பிரமானபத்திரத்தில் கூறியிருப்பதை ஆங்கில நாளிதழ் ஒன்று சில கருத்துகளை வெளியிட்டதை அடுத்து, இந்த நாளிதழ் வெளியிட்ட தகவல்களில் 70 சதவீதம் உண்மை இல்லை என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்தது. அதுமட்டுமல்ல இந்த செய்தி சசிகலாவுக்கு சாதகமாகவே  செய்தியாக வெளியிட்டுள்ளதாக ஆணையம் அதிருப்தி அடைந்தது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தது குறித்து சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்திப்பில் அவர் கூறுகையில்; ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், வெளிநாட்டு டாக்டர்கள் என அனைவரும் அதிக கவனம் கொண்டு சிகிச்சை அளித்தோம்.  ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்திக்க வேண்டும் என்பதை அவருடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், ஜெயலலிதா சிகிச்சை மற்றும் மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டன.  ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த பகுதியில் துரதிருஷ்டவசமாக சிசிடிவி கேமராக்களை நிறுத்தி வைத்தோம். அவர் சிகிச்சை பெறும் காட்சிகளை சம்பந்தமில்லாதவர்கள் பார்க்ககூடாது என்பதற்காக கேமராவை அணைத்து வைத்தோம். ஜெயலலிதாவின் தனிமை மற்றும் பாதுகாப்பு கருதி மற்ற நோயாளிகள் இடம்மாற்றப்பட்டனர். எனவே ஜெ சிகிச்சை பெற்றதற்கு ஆதாரமாக எங்களிடம் எந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் இல்லை என கூறினார்.