Apollo Hospital - Aurangasamy Commission that canceled the study

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் குழு இன்று நடத்துவதாக இருந்த ஆய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மற்றொரு நாளில் நடத்த உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அன்று காலமானார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து, அதிமுகவில் குழப்பங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து கட்சி இரண்டாக பிரிந்தது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம் எழுப்பினார். 

இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அதன்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு, தீபக், தீபா, விவேக் ஜெயராமன், ஜெயலலிதா தொடர்புடையவர்களிடம் ஆஜராகி விளக்கமளித்தனர்.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆவணங்களைத் தாக்கல் செய்து வருகிறார்.

இந்த நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வழக்கறிஞர்கள் குழு, ஆய்வு செய்வதற்கு போதிய ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மற்றொரு நாளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்போலோ நிர்வாகம் ஆணையத்தில் கேட்டுக் கொண்டது. 

இதனைத் தொடர்ந்து இன்று நடக்கவிருந்த ஆய்வை ரத்து செய்வதாக விசாரணை ஆணையம் அறிவித்துள்ளது. மற்றொரு நாளில் ஆய்வு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.