apollo clarify their stand in jayalalitha death row still things going around doubtfully

தமிழக முதலவராக இருந்த ஜெயலலிதாவைக் காப்பாற்ற எத்தனையோ டாக்டர்கள் போராடினார்கள். அயராது பாடுபட்ட அவர்களை நீங்கள் எல்லோரும் அவமதிக்கிறீர்கள் என்று பொங்கி எழுந்து கருத்து தெரிவித்துள்ளது அப்பல்லோ நிர்வாம. இதனிடையே, வழக்கம் போல் திவாகரனும் தினகரனும் அரசியல் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் பேசினார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். அப்போது அவர், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15க்கே உயிரிழந்துவிட்டார் என்று கூறினார். மேலும், அப்பல்லோ மருத்துவமனை கிளைகள் பல இடங்களில் உள்ளன என்றும், அவற்றின் பாதுகாப்புக்கு உரிய உத்தரவாதம் தேவை என்றும் கூறி, அப்பலோ தலைவர் ரெட்டி ஜெயலலிதா மரணம் அடைந்ததை அறிவிக்காமல் இருந்ததாக திவாகரன் கூறினார்.

திவாகரனின் இந்தப் பேச்சு, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து, அப்போலோ நிர்வாகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமான நிலையில் அவர் மரணமடைந்த தேதி, நேரம் குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. மருத்துவ வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையிலேயே, ஜெயலலிதா மரணம் குறித்து அறிவிக்கப்பட்டது என்று அப்போலோ நிர்வாகம் அந்த அறிக்கையில் தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று இரவு, மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், தமது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றார். 

அதற்கு அவர் கூறிய காரணங்கள் வேறு விதமாக இருந்தன. கிளினிக்கல் டெத், பயாலஜிக்கல் டெத் இவற்றுக்கு இடையிலான வேறுபாட்டால் தனது பேச்சு பிரச்னைக்கு உரியதாக, தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுவிட்டதாக அவர் கூறினார். தான் கூறியதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டதாகவும், செயற்கையாக ஜெயலலிதாவை எக்மோ கருவியின் மூலம் உயிரோடு வைத்திருந்ததையே தான் அப்படி குறிப்பிட்டதாகவும் திவாகரன், அப்பலோ தலைவர் ரெட்டி, அப்பலோ மருத்துவமனை பாதுகாப்புக்கு உத்தரவாதம் எதுவும் கேட்கவில்லை என்றும் தெளிவாக்கினார். 

காலையில் பேசும் போது ஒன்றும், இரவு செய்தியாளர்களிடம் பேசும் போது இன்னொன்றுமாக, தெளிவாகக் குழப்பினார் திவாகரன். ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மூலம் விசாரித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு விசாரணை ஆணையத்தில் இருந்து தன்னை ஆஜராகுமாறு சம்மன் எதுவும் வரவில்லை என்று கூறினார் திவாகரன். இதனால் வெளிப்படையாக விழாவில் காலையில் ஒரு பேச்சும், செய்தியாளர் சந்திப்பு நடத்தி இரவு ஒரு பேச்சும் என ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் பேச வேண்டிய காரணம் என்ன எனும் கேள்வி இப்போது எழுந்துள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்த தினகரனோ, தனக்கு ஒன்றும் தெரியாது, தான் அந்த நேரத்தில் மருத்துவமனை செல்லவில்லை என்று ஒதுங்கிக் கொண்டு விட்டார். 

திவாகரனின் கருத்துக்களுக்கு பதில் அளித்த அப்பலோ நிர்வாகம், திவாகரன் கருத்துகள் எல்லாம் தவறானவை என்று குறிப்பிட்டதுடன், இதுபோன்ற கருத்துக்கள் ஜெயலலிதாவின் உடல்நலத்துக்காக அயராது பாடுபட்ட மருத்துவர்களை அவமதிப்பதாக அமைகிறது என்றும் பளிச்செனக் கூறியுள்ளது. 

ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எந்தத் தகவலும் கொடுக்காமல் தன் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மூலம் வாய்தா வாங்கி வருகிறார். என்னதான் நடக்கிறது? எல்லாம் மர்மமாக இருக்கிறது என்பதுதான் இப்போதும் ஜெயலலிதா மரண விவகாரத்தில் தொடர்கிறது.