அண்மையில் காங்கிரஸ் தரைவர் ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராகவும், உத்தரபிரதேச மாநில கிழக்கு பகுதி பொறுப்பாளராகவும் நியமித்தார். இதையடுத்து கடந்த 5 ஆம் தேதி  காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் பிப்ரவரி 11ம் தேதி உத்தரபிரதேச மாநில  கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளராக முறைப்படி பொறுப்பேற்கவுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா என்ட்ரி ஆகியிருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் எழுச்சியைக் கொடுத்துள்ளது.. இந்நிலையில் பிரியங்கா காந்தி வருகையால் என்ன மாதிரியான பாதிப்புகள் தாக்கங்கள் ஏற்படப் போகிறது என்பது குறித்து ஏபிபி நியூஸ் - சிவோட்டர் சர்வே நடத்தியது. 

அதில் நாடு முழுவதும்  பிரியங்காவின் வருகையால் யாருக்கு பலன் கிடைக்கும் என்ற கேள்விக்கு நாடு முழுவதற்கும் காங்கிரஸ் கட்சிக்கு பலன் தரும் என 50% பேர் கூறினர். உ.பி. கிழக்குக்கு மட்டுமே பயன் என்று 18% பேர் கருத்துக் கூறியுள்ளனர். 24% பேர் அரசியல் களத்தில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர்.

52 சதவீதம் பேர் பிரியங்காவின் அரசியல் எழுச்சி பாஜகவை வரும் தேர்தலில் காலி செய்யும் என்று கூறியுள்ளனர். 32 சதவீதம் பேர் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணியை பாதிக்கும் என்று கூறியுள்ளனர். 8 சதவீதம் பேர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து பாஜக தலைவர் ஷானவாஸ் உசேன்  பேசும்போது, பிரியங்கா காந்தி குறித்து எங்களுக்குக் கவலை இல்லை. அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அமேதி, ரேபரேலியில் இந்த முறை பாஜக மாபெரும் வெற்றி பெறும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் என்றார்.

பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வத்ரா குறித்து தனிப்பட்ட முறையில் பாஜக பேசுவது அக்கட்சிக்குத்தான் ஆபத்தை ஏற்படுத்தும் என 71 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். 23 சதவீதம் பேர் அது பாஜகவுக்கு பயன் தரும் என்று கூறியுள்ளனர்.

பிரியங்கா காந்தி இன்னும் சீக்கிரம் அரசியலுக்கு வந்திருக்கலாம் என்று கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 3ல் 2 பங்கு பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 21 சதவீதம் பேர் இது தாமதமில்லை என்று கூறியுள்ளனர். தனது பாட்டி இந்திரா காந்தி மாதிரி இருக்கிறார் என்று 44 சதவீதம் பேரும், இல்லை என்று 42 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.