anybody can give details having jayalalithas death before nov 22 to enquiry commission

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இன்னும் நோட்டீஸே அனுப்பப் படவில்லை என்று விசாரணை ஆணையம் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் பெற்ற சிகிச்சை முறை அல்லது மரணம் குறித்த எந்தவொரு தகவலாக இருந்தாலும் நவம்பர் 22-க்குள் கொடுக்கலாம் என்று விசாரணை ஆணையம் கூறியுள்ளது.

நேற்று, சசிகலா, தினகரன், சுதாகரன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொடர்புடைய அப்பலோ மருத்துவமனை உள்ளிட்ட எவருக்கும் ஆணையத்தில் இருந்து நோட்டீஸ் அனுபப் பட வில்லை என்று தகவல் வெளியானது. 

சென்னை எழிலகத்தின் அருகே பசுமை தீர்ப்பாயம் இயங்கும் கல்சா மகால் கட்டத்தின் முதல் மாடியில்தான் தற்போது, ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டு, அலுவலகம் இயக்கி வருகிறது. ஆனால், இந்த ஆணைய அலுவலகம், கம்ப்யூட்டர், தொலைபேசி என அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் இயங்குகிறதாம். 

இதனிடையே நேற்று முன் தினம், விசாரணைக்கு ஆஜராகுமாறு 15 பேருக்கு விசாரணை ஆணைய தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி நோட்டீஸ் அனுபியிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்தத் தகவலை மறுத்த நீதிபதி ஆறுமுகசாமி, இதுவரை யாருக்கும் நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும், எல்லாம் நவம்பர் முதல் சூடுபிடிக்கும் என்றும் கூறினார். எனவே இந்த விசாரணை தொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று கூறப்பட்டது. 

முன்னதாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 

பின் செப்டம்பர் 29 ஆம் தேதி அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்திற்கான காரணங்கள் குறித்து
விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று அதற்கு உத்தரவிடப்பட்டது.

ஜெயலலிதாவின் இல்ல‌மான போயஸ் கார்டனில் இருந்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை இன்னும் துவங்கப்படவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு விசாரணை ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாவும், அதற்கு அவர்களிடம் இருந்து விளக்கம் கிடைத்த பிறகே விசாரணை தொடங்கும் எனத் தகவல் வெளியானது. ஆனால், அவ்வாறு நோட்டீஸ் அனுப்பப் பட வில்லை என்று ஆறுமுகசாமி கூறிவிட்டார்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 20 பேர் கடிதங்கள் அனுப்பியுள்ளனராம். 

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தமிழகத்தில் பலரும் எதிர்பார்த்துள்ள சூழ்நிலையில் அது மேலும் மேலும் தாமதமாகிக் கொண்டேதான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.