ஆவின் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் தமிழ்நாடு தனிப்படை காவல்துறையால் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். ராஜேந்திர பாலாஜியுடன், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராமகிருஷ்ணன், நாகேஷன், அதிமுக நிர்வாகி பண்டியராஜன் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

தற்போது மீண்டும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.16 லட்சம் மோசடி தொடர்பாக வழக்கு பதிய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட கோரி ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்றத்தில் மதுரை கோமதியாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மனு தாக்கல் செய்துள்ளார். 

தனது மகனுக்கு ஆவினில் கிளை மேலாளர் வேலை வாங்கித் தருவதற்காக ரூ. 16 லட்சம் கொடுத்த புகாரில், ஸ்ரீவில்லிபுத்துார் மானகசேரியை சேர்ந்த பரமகுரு, கரூர் தாந்தோணி மலையை சேர்ந்த முத்துசாமி, திருச்சியை சேர்ந்த பிரின்ஸ் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செல்வராஜ் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதியவில்லை. இதை தொடர்ந்து நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யக்கோரி, செல்வராஜ் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.