தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. இதனால், ஒவ்வொரு கட்சியும் வியூகங்களை வகுத்துவருகின்றன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். அப்போது முதலே அவரை புரோமோட் செய்யும் வேலையை அதிமுகவினர் சமூக ஊடகங்களில் செய்துவருகின்றனர். அண்மையில் யார் தேவை என்ற பாணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புரோமோட் செய்தும் மு.க. ஸ்டாலினை கிண்டலடித்தும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டன.


இதற்குப் பதிலடியாக திமுகவினரும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இந்தப் போட்டாபோட்டியால், இந்தப் புகைப்படங்கள் பகிர்வது சமூக ஊடங்களில் இரு கட்சியினரும் நிறுத்திக்கொண்டனர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்த புகைப்படங்களை இப்போது நேரடியாக போஸ்டர்களாக ஒட்டி பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள். கோவையில் காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.


யார் தேவை என்ற பாணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இம்சை அரசன் 23-ம் புலிகேசி போல விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. எடப்பாடி பழனிசாமி படத்துடன் இடம்பெற்ற இந்த போஸ்டரில் தன்னம்பிக்கை மிக்க தலைமையா? துண்டுச்சீட்டு தலைமையா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இன்னொரு போஸ்டரில் எடப்பாடி பழனிசாமி படத்துடன் உழைப்பை நம்பலாமா? பிறப்பை நம்பலாமா என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரை அச்சடித்தது போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. மொட்டைக் கடிதாசி போல ஒட்டியிருக்கிறார்கள். இந்த போஸ்டரைக் கண்ட திமுகவினர் கொந்தளித்தனர். ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். இதுதொடர்பாக போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது. இதே போஸ்டர்கள் ராமநாதபுரத்திலும் ஒட்டப்பட்டிருந்தன. இதைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.