புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா.! மோடிக்கு அதிர்ச்சி கொடுத்த எதிர்கட்சிகள்.. திமுகவும் அதிரடி அறிவிப்பு
புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள நிலையில், இந்த நிகழ்வை திமுக புறக்கணிப்பதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அறிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம்
டெல்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகளை கடந்து 100 ஆண்டை நோக்கி பயணிக்கிறது. இதனையடுத்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் மோடி திட்டமிட்டார். இதனையடுத்து பழைய நாடாளுமன்ற கட்டிடம் இடிக்கப்படாமல் அதற்கு அருகிலேயே 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா கட்டிடப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.
பிரம்மாண்ட கட்டிட துவக்க விழா
இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அமைந்துள்ள மக்களவை அரங்கில் 888 உறுப்பினர்கள் வசதியாக அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது. 300 எம்பிக்கள் அமரும் வகையிலும் மாநிலங்களவையில் வசதி ஏற்படுத்தப்பட்டது. 1,280 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையிலும் மக்களவை அரங்கில் கூட்டுக்கூட்டம் நடத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தில் எம்.பி.க்களின் ஓய்வு அறைகள், பிரம்மாண்ட நூலகம், வாகன நிறுத்துமிடமும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் வருகிற 28 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பார் என அறிவிக்கப்பட்டது.
விழாவை புறக்கணித்த அரசியல் கட்சிகள்
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தானே திறக்க வேண்டும். பிரதமர் ஏன் திறக்கிறார் என அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தது.மேலும் சவார்க்கர் பிறந்த தினத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை எதிர்த்துள்ள ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து திமுகவும் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்காது என அறிவித்துள்ளது.