பிரதமர் நரேந்திர மோடி என் அருகில் சில கணம் நின்றார். பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை அண்ணன் பிரதமருக்கு ஒரு வாக்களித்தார் "நாம் சூர்யாவை வருங்காலத்தில் தலைசிறந்த தலைவராக ஆக்குவோம்".
இளம் வயதில் பாஜகவின் மாநிலச் செயலாளரான எஸ்.ஜி.சூர்யாவைப் பெரிய தலைவராக்குவோம் என பிரதமர் மோடியிடம் அண்ணாமலை உறுதியளித்துள்ளது பேசும் பொருளாக உருவாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரசு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காகத் தெலுங்கானாவிலிருந்து பிரதமர் மோடி சென்னை வந்தார். அவருக்குத் தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் ரூ31,400 கோடி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இதனையடுத்து, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமான நிலையம் சென்ற பிரதமர் அதிமுக தலைவர்கள், மதுரை ஆதினம் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார். பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பிரதமர் பேசிக் கொண்டிருக்கும் போது விமான நிலையம் வந்தடைந்த அண்ணாமலை கட்சியின் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். கட்சியின் மாநிலச் செயலாளரான எஸ்.ஜி.சூர்யாவை அறிமுகம் செய்யும் போது, நாம் சூர்யாவை வருங்காலத்தில் தலை சிறந்த தலைவராக ஆக்குவோம் எனக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக SJ.சூர்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பிரதமர் நரேந்திர மோடி என் அருகில் சில கணம் நின்றார். பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை அண்ணன் பிரதமருக்கு ஒரு வாக்களித்தார் "நாம் சூர்யாவை வருங்காலத்தில் தலைசிறந்த தலைவராக ஆக்குவோம்". இது வார்த்தைகளல்ல, என் வாழ்வின் அர்த்தம். மனம் நெகிழும் உயிர் மலரும் இத்தருணத்தை சாத்தியமாக்கிய கடவுளுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
2012'ம் ஆண்டு குஜராத் மாநில தேர்தல் களத்தில் இன்றைய பிரதமர் மோடி அன்றைக்கு மீண்டும் குஜராத் முதல்வராக ஆட்சியில் அமர தகவல் தொழில் நுட்ப யுக்தி குழுவில் இடம் பெற்றிருந்தார். தொடர்ந்து 2014'இல் இந்திய தேசத்தில் தலையெழுத்தை மாற்றிய தேர்தலான நாடாளுமன்ற தேர்தலில் மோடி பிரதமராக உழைத்த சிறப்பு தகவல் தொழில்நுட்ப குழுவிலும் இவரின் பங்கு உள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகம் அரசியல் களம் தகவல் தொழில்நுட்ப குழு என ஒன்று உள்ளது என அறிந்திராத காலத்திலலேயே பா.ஜ.க'வின் மாநில தகவல் தொழில்நுட்ப குழுவின் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவரது தலைமையில் உள்ள தகவல் தொழில்நுட்ப குழுதான் 2016'ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க'வில் பணியாற்றியது. இதுவரை இவர் பா.ஜ.க'விற்காக 10 சட்டமன்ற தேர்தல்களில் தனது பிரச்சார யுக்திகள் மூலம் பங்களித்துள்ளார். இத்தனை குறைந்த வயதில் இவ்வளவு தேசிய சிந்தனை கொண்ட இவருக்கு சமீபத்தில் தமிழக பா.ஜ.க'வின் மாநில செயலாளராக பொறுப்பை வழங்கியிருக்கிறது என்பது குறிப்பித்தக்கது.
