ஊர்க்காவல் படையினருக்கு பத்து நாள் மட்டுமே பணி என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையினருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ஊர் காவல் படை இரவு பகல் பாராமல் பல்வேறு காவல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 2017 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நாளொன்றுக்கு 150 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை, 560 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

ஆனால் பணி நாட்களை ஐந்து நாட்கள் என நிர்ணயம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் ஊர்காவல்படையினரின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, பணி நாட்களை 10 நாட்களாக அதிகரித்து,  2019ம் பிப்ரவரி 19ம் தேதி உள்துறை அரசாணை பிறப்பித்தது.இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், பாஜக மாநில துணை தலைவருமான அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், 10 நாட்கள் மட்டுமே பணி என உத்தரவு பிறப்பிக்கப் பட்டாலும், மாதம் முழுவதும் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவதாகவும், பத்து நாட்களுக்கான சம்பளம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.  

மேலும் 2019ம் ஆண்டு அரசாணைப்படி 4 மணி நேரம் வரை பணியில் இருப்பவர்களுக்கு 280 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்றும், 4 முதல் 8 மணி நேரம் வரை பணியில் இருந்தால் மட்டுமே 560 ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறையின் பெரும்பாலான பணிகளை செய்யும்  ஊர்க்காவல் படையினருக்கு 10 நாட்கள் மட்டுமே ஊதியம் வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்து, மாதம் முழுவதற்குமான ஊதியத்தை வழங்க நடவடிக்கையை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, தமிழக அரசும், டிஜிபியும்  10 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.