தவறான சிகிச்சையால் கால் பந்து வீராங்கனை உயிரிழப்பு.!திமுக ஆட்சியில் அரசு துறைகள் அழிந்து வருகிறது.! அண்ணாமலை
கால்பந்து வீராங்கனைக்கு அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கால் எடுக்கப்பட்ட நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கால் வலி சிகிச்சைக்கு சென்ற மாணவி
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரியா,(17) ராணி மேரி கல்லூரியில் படித்து வருகிறார். கால்பந்து வீராங்கனையான பிரியாவுக்கு வலது கால் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னும் பிரியாவின் காலில் அதிகளவு வலி மற்றும் வீக்கம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கடந்த வாரம் உள் நோயாளியாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருடைய வலது காலில் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டதால் உடல் உறுப்புகள் பாதிப்பு அடைந்தது. இதனையடுத்து முட்டிக்கு மேல் பகுதியிலிருந்து கால் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தவறான சிகிச்சையால் உயிரிழப்பு
சிகிச்சை அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில், இரத்த நாள சிகிச்சை நிபுணர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருத்துவர், சிறுநீரகவியல் துறை நிபுணர் மற்றும் மூத்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சிறுநீரகம், ஈரல் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாமல் இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கால் சவ்வு சிகிச்சைக்காக சென்ற கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஒவ்வொரு துறையும் அழிந்துள்ளது
சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். திமுக அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
இதையும் படியுங்கள்