கர்நாடகாவில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர் அண்ணாமலை. கர்நாடகாவில் 9 ஆண்டுகளாக ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிய அண்ணாமலை, கடந்த ஆண்டு அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். கோவை, கரூர் பகுதியில் தற்சார்பு விவசாயம் செய்யப்போவதாகவும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினி தொடங்க உள்ள கட்சியின் முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட உள்ளார் என்ற தகவல்களும் வெளியாயின. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். இதனையடுத்து கோவை திரும்பிய அவருக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
எந்தப் பதவியையும் எதிர்பார்த்து பாஜகவில் இணையவில்லை என்று பேட்டி அளித்த அண்ணாமலையை பாஜக மாநில துணைத் தலைவராக நியமித்துள்ளார் மாநில தலைவர் எல்.முருகன். அவருடைய பணி சிறக்கவும் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கட்சியில் சேர்ந்த 4வது நாளிலேயே அண்ணமலைக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.