அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி, அரியர் தேர்வு ரத்து விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அவர் புகார்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. குழு தரும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விவகாரம்  பெரும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் சூரப்பாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல் அவர் தனது மகளை முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்த்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆனால். இந்த புகாருக்கெல்லாம் சூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார். தாம் மிகவும் சுத்தமானவன் என்றும், விசாரணையை எதிர்கொள்ள தயார் எனவும் கூறியுள்ளார். மறுபுறம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் சூரப்பாவை உடனடியாக  சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். 

இந்நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வந்ததையடுத்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.