Anna transport Union chinnasamy talked as stupin about the protest

போக்குவரத்து துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் சென்சிடீவாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், அண்ணா தொழிற்சங்க தலைவர் சின்னசாமியின் எகத்தாளமான வார்த்தைகள் போராட்டக்காரர்களின் ஆத்திரத்தில் டீசலை ஊற்றுவதாக அமைந்திருக்கிறது. 

அ.தி.மு.க.வின் தொழிலாளர் அணியின் அமைப்பான ‘அண்ணா தொழிற் சங்க’த்தின் மாநில செயலாளராக இருப்பவர் சின்னசாமி. ஒரு காலத்தில் காங்கிரஸில் இருந்துவிட்டு பின் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி இரண்டு முறை கோயமுத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத்தின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இடம் பொருள் ஏவல் பார்க்காமல் அதிரடியாய் பேசுவதும், அதற்காக மிக மோசமான விமர்சனங்களை வாங்கிக் கட்டுவதும் இவருக்கு வாடிக்கை. அப்பேர்ப்பட்ட மனிதர் போக்குவரத்துதுறை தொழிலாளர்களின் ஸ்டிரைக்கை ஒட்டி உதிர்த்த வார்த்தை பிரச்னையை விஸ்வரூபமெடுக்க வைத்திருக்கிறது. 

அதாவது சின்னசாமி “இப்படி போராட்டம் பண்றது சரிதான்னான்னு யோசிச்சுப் பார்க்கணும். இதுவரைக்கும் எந்த ஒரு கோரிக்கையையும் அரசாங்கம் முழுசா ஏத்துக்கிட்டதா சரித்திரமே கிடையாது. நாங்க 8 ரூபா கேட்டா, அரசு 5 ரூபா கொடுக்கும். இதுதான் நடைமுறை. இதுக்கு முன்னாடி போடப்பட்ட, பனிரெண்டு ஒப்பந்தங்களை விட இந்த முறை போட்ட ஒப்பந்தம் சிறப்பானதா இருக்குது. பல நாட்கள் கழிச்சு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைச்சிருக்குது. 

இப்ப போக்குவரத்து துறை ஆறாயிரம் கோடி ரூபாய் கடன்ல சிக்கி இருக்குறதுக்கு காரணமே தி.மு.க.தான். இந்த நேரத்துல கொடுக்கிற பணத்தை வாங்கிக்காம, இப்படி போராடிட்டு இருந்தா, அரசு போக்குவரத்தை தனியார் மயமாக்கும் அபாயம் இருக்குது. இப்படி தனியார் மயமாவதற்கு முன்னாடி சுதாரிச்சு அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கணும். இல்லைன்னா துறையில் உள்ள ஒரு லட்சத்து முப்பதாயிரம் ஊழியர்களும் மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு வீட்டுக்கு போக வேண்டியதுதான்.” என்று சொல்லியிருக்கிறார். சின்னசாமியின் இந்த கடைசி வரிகள் போராட்ட தொழிலாளர்களை பொசுங்க வைத்துவிட்டது. 

அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களே...”எப்பவுமே வாய்த்துடுக்கா பேசுறதே சின்னசாமிக்கு பொழப்பா போச்சு. இந்த சங்கத்தின் மாநில பொறுப்பில் உட்கார்ந்துகிட்டு இவரு இத்தனை வருஷத்துல உருப்படியா செஞ்ச காரியம் ஏதாச்சும் இருக்குதா? முரட்டுத்தனமா பேசுறதும், நடக்குறதுமே இவரோட பொழப்பு.

எம்.எல்.ஏ.வா இருக்குறப்ப சேலத்துல நடந்த அரசு விழா மேடையில பெரியவர் ஒருவரை தலையில தட்டி போட்டோவுக்கு போஸ் கொடுக்க இவர் சொன்ன விவகாரம் மாநிலம் முழுக்க கண்டன அலையை கிளப்பியது நினைவிருக்கலாம். அம்மா வரைக்கும் புகார் போயி, அம்மா இவரை கூப்பிட்டு விட்டு திட்டி தீர்த்தாங்க. இந்த துடுக்குத்தனத்தின் விளைவாகவே போன தடவை எலெக்‌ஷன்ல இவரை கை கழுவிட்டாங்க. 

ஆனாலும் இந்த அண்ணா தொழிற்சங்க பதவியில் ஒட்டிக்கிட்டு இருக்கிற சின்னசாமி தொழிற்சங்க ஆளுங்களை பத்தி ‘மூட்டை கட்டிட்டு வீட்டுக்கு போக வேண்டிதான்’ அப்படின்னு கேவலமா பேசுறது வாய்க்கொழுப்பான செயல். 

அரசாங்கம் கொடுக்குறதை வாங்கிட்டு போக நாங்க என்ன பிச்சைக்காரங்களா? அவ்வளவு பொறுப்புணர்ச்சி இவருக்கு இருந்தால் இவரு ஒரு டவுன் பஸ்ஸை எடுத்து ஓட்ட வேண்டிதானே? ஏன் நாற்காலியை தேய்ச்சுட்டு உடார்ந்திருக்கார்? இருக்கட்டும், இந்த பிரச்னை முடிஞ்ச பிறகு இவருக்கு வெச்சுக்குறோம். ” என்று பொங்கி தீர்த்துள்ளனர்.

ஆக தன் வாயாலேயே கெட்டிருக்கிறார் சின்னசாமி.