மு.க அழகிரி தலைமையில் நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அவரது நெருங்கிய ஆதரவாளர் கூறிவருகின்றனர். 

திமுக சார்பாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க அழகிரி மத்திய இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார். திமுக தென்மண்டல பொறுப்பாளராகவும் வலம் வந்த அவர், கட்சியில் தனி செல்வாக்குடன் கோலோச்சினார்.  தீடீரென பல்வேறு அரசியல் காரணங்களால் கட்சியில் இருந்து அடியோடு நீக்கப்பட்டார் அழகிரி. ஆனாலும் மீண்டும் கட்சியில் இணைய பல்வேறு முயற்சிகளில் தொடந்து அவர் ஈடுபட்டுவந்தார். ஆனால் அவரது முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.  

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, மீண்டும் அவர் கட்சியில் இணைக்கப்பட போகிறார் என தகவல்கள் உலா வந்தன. ஆனால் திமுக தலைமை அவரை கண்டுகொள்ளவில்லை. கட்சிப்பணிக்கு அழைத்தால் எந்த எதிர்பார்ப்புமின்றி வந்து பணியாற்ற தயார் என மு.க இறங்கி வந்தார். ஆனாலும் திமுக தலைமை அதை பொருட்படுத்தவில்லை. இதனால்  சில மாதங்களுக்கு முன்னர் தனது இல்லத்தில் தன் ஆதரவாளர்களோடு 

ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் அழகிரி. அக்கூட்டத்திற்கும் பின்னர், அழகிரி தொடர்ந்து அமைதிகாத்து வந்தார். திடீரென நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்கப் போவதாக வெளியிட்ட அறிவிப்பையடுத்து. அவரின் நெருங்கிய நண்பரான மு.க அழகிரியும்,  தானும் இனிமேல் திமுகவில் இனைவதற்கான வாய்ப்பு இல்லை எனவும், ஜனவரி 3 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி தனிக் கட்சி குறித்து முடிவெடுப்பேன் எனவும் அறிவித்தார்.மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் விரைவில் சந்திக்கப் போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென நடிகர் ரஜினிகாந்த்  கட்சி தொடங்கப் போவதில்லை என பின்வாங்கியுள்ளார். 

ஆனாலும் அழகிரி தனது திட்டத்தில் உறுதியாக உள்ளார். திட்டமிட்டபடி ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும், எந்த வகையிலும் அது தடைபடாது என அழகிரி உறுதிபட கூறியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய ஆதரவாளர்கள் அனைவரும் 3ஆம் தேதி தவறாமல் மதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

அதில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அழகிரியின் சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரின் நெருங்கிய ஆதரவாளர்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குறைந்தபட்சம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது. கூட்டத்திற்குப் பின்னர் அழகிரி என்ன முடிவு  எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.