தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் நேர்மையாக இருக்கவில்லை எனவும், மாநில அரசின் சுயாட்சி எங்கே போனது எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். 

இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. 

இந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினரும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், குழுமூரில் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் நேர்மையாக இருக்கவில்லை எனவும், மாநில அரசின் சுயாட்சி எங்கே போனது எனவும் தெரிவித்தார். 

சமூக நீதிக்கு எதிரான அரசு நடைபெற்று கொண்டிருக்கிறது எனவும், இது யாருக்கான அரசு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

அனிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.