விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் திடீரென ஏற்பட்ட விஷவாயு கசிவால்  இதுவரை  11 பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்த கோர விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது அதன் விவரம் :-  "நெகிழ்வுத் தன்மை கொண்ட பிளாஸ்டிக்ஸ்" (expandable plastics) உற்பத்தி செய்வதற்கான இந்த ஆலையில் ஸ்டைரீன் மோனோமெர் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டைரீன் சேமித்து வைக்கப்படும் தொட்டிகள் 17டிகிரிCக்கும் குறைவான வெப்பத்தில் பாதுகாக்கப்படவேண்டும் என்கின்றன விதிகள். பரவிவரும் கொரோனா தொற்றால், எல்ஜி பாலிமர் நிறுவனத்தில் உற்பத்தி நடைபெறவில்லை,  அட்டவணைப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெற்றுவந்தன. சரியான வெப்பநிலையில் ஸ்டைரீன் வாயு சேமித்து வைக்கப்படாததால் கசிவு ஏற்பட்டுள்ளது. இது அந்த சேமிப்பு தொட்டியில் அழுத்தத்தை ஏற்படுத்தி, வால்வு உடைந்து வாயு வெளியேறி விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டைரீன் வாயுவை சேமித்து வைத்திருந்த தொட்டிகள் பழையதும், முறையாக பராமரிக்கப்படாமலும் இருந்தவை. 

பராமரிப்பு சரியாக இல்லாத காரணத்தால் மூன்று டன் ஸ்டைரீன் வாயு கசிந்து, 5 கி.மீ சுற்றளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த சேமிப்பு தொட்டிகளில் ஏற்பட்டிருந்த அரிப்புக்களை ஆலை நிர்வாகம் கண்டுகொண்டதாக தெரியவில்லை என்கிறது டெல்லியை சேர்ந்த "அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்". இப்படி வைக்கப்பட்டுள்ள வாயுக்களின் சேமிப்பு தொட்டிகளில் பல்வேறு பாதுகாப்பு கட்டமைப்புகள் இருக்கும், அதையும் தாண்டி ஏற்பட்டுள்ள இந்த விபத்து  அந்த ஆலையில் இருந்த கட்டமைப்புகளின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.   இந்த ஆலையில் இருந்த மற்றொரு பிரச்சனை, இதைப்போன்ற நிலையற்ற கலவைகளை கண்டறியக்கூடிய கட்டமைப்புகளில் உள்ள போதாமைகள், குறிப்பாக ஸ்டைரீன் வாயு வெளியேறுவதை கண்டறியக்கூடிய தொழில்நுட்பம் அங்கு நிறுவப்படவில்லை. இதைப்போன்ற அபாயகரமான வேதியல் பொருட்களை கையாள கடுமையான விதிகள் உள்ளன,  

குறிப்பாக ஆலைகள் மூடப்பட்டு திறக்கப்படுவதற்கு முன்னர் எந்த மாதிரியான பராமரிப்பு பணிகள் நடைபெறவேண்டும் என்றும், எப்படி படிப்படியாக உற்பத்தியை துவக்க வேண்டும் போன்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றை ஆலை நிர்வாகம் கடைபிடிக்கவில்லை என்று தெரியவருகிறது.  இந்த ஆலையின் மொத்த நிலப்பரப்பு, குடியிருப்பு பகுதிகள் உட்பட சுமார் 600 ஏக்கர்கள் இருக்கும். அருகில் குடியிருப்பு பகுதிகளான ராஜரத்தின வெங்கடாபுரம், அசோக் நகர் மற்றும் பத்மநாபுரத்தில்  உள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் இளைஞர்களும், காவல் துறையினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் துரிதமாக செயல்படாமல் போயிருந்தால் இழப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்கின்றனர் அந்த பகுதி மக்கள். ஸ்டைரீன் பாலிமருக்கு இரு கோர முகங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார் சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த ஜெயராமன். இந்த பாலிமரை முதன்முதலாக உற்பத்தி செய்தது IG பார்பேன் என்கிற நிறுவனம்.

ஜெர்மனியில் நாஜிக்கள் அமைத்த வதை முகாம்களில் பல லட்சக்கணக்கான யூதர்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட "ஸ்ய்க்ளோன்-பி" வாயுயை உற்பத்தி செய்தது இந்த பார்பேன் நிறுவனம்தான். 1944 ஆம் ஆண்டு, ஏஜென்ட் ஆரஞ்சு மற்றும் நாபாம் தயாரித்த டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம்தான் இப்போது பாலிஸ்டைரீன் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. டவ் கெமிக்கல்ஸ், போபால் விஷவாயு விபத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தாய் நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது.